புது தில்லி: போக்குவரத்து விதிகளை மதிக்காமல், தலைக்கவசங்கள் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் இறந்து போகிறார்கள். இதை தடுக்க போக்குவரத்து துறை சார்பில் வாகன ஓட்டிகள் எப்பொழுதும் தலைக்கவசத்தை அணிய வேண்டும் என தொடர்ந்து கூறிவருகின்றனர். விழிப்புணர்வு மூலமாகவும், துண்டுப் பிரசு வழங்கிய தலைக்கவசங்களின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
பலர் தலைக்கவசம் அணிந்தாலும், அது பாதுகாப்பானதா? நல்ல தரம் வாய்ந்ததா? என்று கூட பார்ப்பதில்லை. ஏதோ போக்குவரத்து போலீசாரிடம் இருந்து தப்பித்தால் போதும் என்ற எண்ணத்துடன் சந்தையில் விற்கும் மலிவான ஹெல்மெட் வாங்கி, தங்கள் பாதுகாப்பை குறித்து எந்தவித கவலையும் இல்லாமல் அணிந்து செல்கிறார்கள். இதுவும் உயிருக்கு ஆபத்தானது தான் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
எனவே வாகன ஓட்டிகளை பாதுகாக்க மத்திய அரசு ஒரு புதிய விதிகளை வகுத்துள்ளது. இதுக்குறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, "வரும் ஜனவரி 15 முதல் ஐ.எஸ்.ஐ சான்றிதழ் பெற்ற ஹெல்மெட்டுகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தலைக்கவசங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் விதிகளை பின்பற்றி தரமான ஹெல்மெட்டுகளை தயாரிக்க வேண்டும். அப்படி தயாரிக்க தவறும் பட்சத்தில், அந்த நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது தரமில்லாத ஹெல்மெட்டுகளை விற்பவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். புதிய விதிகள் படி, ஹெல்மெட்டுகளை தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை எந்த உத்தரவாதமும் (வாரன்ட்) இல்லாமல் கைது செய்யப்படலாம்.
மத்திய அரசாங்கத்தின் முடிவு இரு சக்கர வாகனம் உற்பத்தியாளர்கள் சங்கத்தால் பாராட்டப்பட்டு உள்ளது. மேலும் எப்படி போலியான மருந்துகள் உடலுக்கு நச்சு போன்றதோ... அதேபோல் ஐ.எஸ்.ஐ. உத்தரவாதம் இல்லாமல் வாங்கும் தலைக்கவசங்கள் போலித்தனமானது என்று இரு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
புதிய விதி என்ன?
> வரும் ஜனவரி 15-க்குப் பிறகு ஐ.எஸ்.ஐ. லோகோ உடன் ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்படும்.
> இந்த ஹெல்மெட் இந்திய தரநிலைகள் பணியகம்(BIS) (ISIS) 4151: 2015 தரத்திற்கு இருக்க வேண்டும் .
> ஹெல்மெட்டின் எடை 1.2 கிலோக்கு அதிகமாக இருக்கக்கூடாது
> ஐ.எஸ்.ஐ தரமில்லாமல் தயாரிப்பது, விற்பது குற்றம். மீறினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.