ஹலோ டியர் ரோமியோக்களை வளைக்க மும்பை போலீஸின் புதிய மீம்ஸ் இணையத்தில் வைரலாகிறது!!
மும்பையில் ட்விட்டர் மற்றும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலைதளங்களை பயன்படுத்தும் கல்லூரி மற்றும் பணிபுரியும் இளம் பெண்களுக்கு ‘ஹலோ டியர்’ என்ற பெயரில் மெசேஜ்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் மூலம் நட்பாக இருக்க விரும்புவதாக கூறி சில இளைஞர்கள் காதல் வலை வீசுவதாகவும் கூறப்படுகிறது. சமூகவலைதளங்களில் பதிலளிக்கும் பெண்களுக்கு தொடர்ந்து காதல் ரசமான தகவல்களை அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்த விவகாரம் கடந்த சில நாட்களாக மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறி்த்து ஏராளமான பெண்கள் புகார்களை அளித்துள்ளனர். அந்த கும்பலை கண்டுபிடிக்க மும்பை போலீஸ் தொழில்நுட்ப ஆய்வு பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதனிடையில், ‘ரோமியோ’க்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் அதேசமயம் நகைச்சுவை உணர்வுடன் மும்பை போலீஸார் ட்விட்டரில் மீம்ஸூடன் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில் ‘‘அது போன்றவர்களை முடக்குங்கள். எங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தாருங்கள். அவர்களின் உணர்வு மற்றும் நோக்கத்தையும் நாங்கள் உரியமுறையில் ‘கவனித்து’ நடவடிக்கை எடுக்கிறோம். 100-க்கு போன் செய்யுங்கள்; பெண்கள் பாதுகாப்பு’’ என பதிவிட்டுள்ளனர். மேலும் இதனுடன் சேர்த்து பல்வேறு நகைச்சுவை மீம்ஸ்களையும் பதிவிட்டுள்ளனர்.
Block them. Call us. We will take good care of their emotion & intention! #Dial100 #WomensSafety pic.twitter.com/lrUy4j6xSj
— Mumbai Police (@MumbaiPolice) June 27, 2018
மும்பை போலீஸின் நகைச்சுவையுடன் கூடிய கண்டிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மும்பை போலீஸின் டவீட்டை வரவேற்பு தெரிவித்து ஏராளமான இளம் பெண்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த மீம்ஸ் அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!.
இந்த மீம்ஸ்-களுக்கு ட்விட்டரில் மொத்தம் 9000 லைக்ஸ் கிடைத்துள்ளது. இந்த ட்விட் பதிவை மொத்தம் 4000 பேர் ரீ-ட்விட் செய்துள்ளனர்.