ஹோலி பண்டிகையை முன்னிட்டு இன்று பிற்பகல் 2.30 மணி வரை டெல்லியில் மெட்ரோ சேவை ரத்து செய்யப்படுகிறது.
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆண்டுதோறும் ஹோலிப் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அன்றைய தினம் பெரியோர் முதல் சிறியவர் வரை வண்ண வண்ணப் பொடிகளை ஒருவர் மற்றவர் மீது பரஸ்பரம் பூவதும், பல வண்ணங்கள் கலந்த நீரை பீய்ச்சி அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும் வழக்கம்.
வசந்த காலத்தை வரவேற்கும் ஹோலிப் பண்டிகை இன்று 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாகவே வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவியும், நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் லத்மார் ஹோலி மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கண்ணனை ராதையும் அவளது தோழிகளும் கம்பால் விரட்டியடித்ததை குறிக்கும் வகையில், மதுராவில் உள்ள பெண்கள், ஆண்களை விரட்டி, விரட்டி கம்பால் அடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்களிடம் ஆண்கள் சிக்கித் தவிக்கும் விசித்திர விழாவில், குதுகாலம் கரைபுரண்டோடியது.
இதனைத் தொடர்ந்து இன்று ஹோலி பண்டிகை முன்னிட்டு டெல்லியில் முழுவதும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு இன்று பிற்பகல் 2.30 மணி வரை டெல்லியில் மெட்ரோ சேவை ரத்து செய்யப்படுகிறது.