திராவிட செம்மல் கருணாநிதியின் வாழ்கை பயணம் -ஒரு பார்வை!

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி-யின் வாழ்கை பயணம் ஒரு பார்வை! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 8, 2018, 12:15 PM IST
திராவிட செம்மல் கருணாநிதியின் வாழ்கை பயணம் -ஒரு பார்வை!  title=

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி-யின் வாழ்கை பயணம் ஒரு பார்வை! 

திமுக தலைவர் கருணாநிதி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். இவரின் இயற்பெயர் தட்சிணா மூர்த்தி. அதன் பின்னர் அவர் தனது பெயரை ‘முத்துவேல் கருணாநிதி’ என்று மாற்றிக்கொண்டார். அவரது குழந்தைப்பருவமும், ஆரம்பக்கல்வியும் திருப்திகரமாக இல்லாதபோதிலும், அவர் தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டவர்.

கிரிக்கெட் காதலர் கருணாநிதி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சிறு வயதில் அவருக்கு பிடித்தமான விளையாட்டாக இருந்தது ஹாக்கி. போர்ட் ஸ்கூல் ஹாக்கி டீமிற்காக விளையாடி இருக்கிறார் கருணாநிதி. இவர் எட்டாம் வகுப்பு மாணவராக இருந்த போது (1939) பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் 'நட்பு' என்ற தலைப்பில் பேசினார். 

கருணாநிதி முதன்முதலில் துவங்கிய பத்திரிகையின் பெயர் மாணவ நேசன். 1941 ஆம் ஆண்டில் வெளியான மாணவ நேசன் ஒரு மாத இதழ். முதன் முதலில் கருணாநிதி தொடங்கிய அமைப்பு தமிழ் மாணவர் மன்றம். நீதிக்கட்சியை சேர்ந்த அழகிரிசாமியால் தன் சிறுவயதில் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி. அதன் காரணமாகவே தம் மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார். தான் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்படாமல் இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருப்பேன் என்று ஒரு முறை கருணாநிதி கூறினார்.

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முரசொலி பத்திரிகையை தொடங்கி, தனது எழுத்துத் திறன் மூலமாக, கட்சி உறுப்பினர்கள் பற்றியும், அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார் கருணாநிதி. கள்ளக்குடியில் ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும், ஒரு போராளியாக களமிறங்கியதே அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

1961-ல், தி.மு.க.-வில் சேர்ந்த கருணாநிதி, பின்னர் அக்கட்சியின் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டு, 1962-ல் அதாவது அடுத்த ஆண்டே எதிர்க்கட்சி தலைவரானார். 1967-ல் திமுக கட்சி ஆட்சிக்கு வந்த போது, கருணாநிதி, ஒரு சக்திவாய்ந்த நிலைக்கு உயர்ந்தார்.

1967ல் முதலமைச்சராக இருந்த அண்ணா திடீர் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, கருணாநிதி முதலமைச்சர் பதவியை அலங்கரித்தார். அது முதல் கருணாநிதி வாழ்க்கையில் ஏற்றம் தான்., 1971, 1989, 1996, 2006 ஆகிய ஆண்டுகளில் முதலமைச்சர் பதவி கருணாநிதியை அலங்கரித்து அழகு பார்த்தது. 

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் தான் அதிகபட்சமாக 3 முறை வெற்றி பெற்றுள்ளார் கருணாநிதி. சைதாப்பேட்டை, அண்ணாநகர், திருவாரூர், துறைமுகம் ஆகிய தொகுதிகளில் தலா 2 முறை தேர்வுசெய்யப்பட்ட கருணாநிதி, 1957 ஆம் ஆண்டுமுதல்  60 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்தார். 

தமிழக வரலாற்றில் நீண்ட கால முதலமைச்சராக பதவி வகித்தவரும், நீண்ட கால எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகித்தவரும் கருணாநிதியே. தமிழக வரலாற்றில் அதிகபட்ச இடங்களில் வெற்றிபெற்று ஒரு கட்சி ஆட்சி அமைத்தது கருணாநிதி  தலைமையில்தான். 1971-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 182 இடங்களில்  தி.மு.க. வெற்றிபெற்றது.

அதிகபட்ச இடங்களைப் பெற்று எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தவரும் இவரே. இவற்றையயெல்லாம் தாண்டி, தமிழக அரசியல் வரலாற்றில் நடைபெற்ற தேர்தலில், தோல்வியை சந்திக்காத தலைவராக மிளிருகிறார் கருணாநிதி. 2016-ம் தேர்தலில்தான் திருவாரூர் தொகுதியில் 68 ஆயிரத்து 366 வாக்குகள் பெற்று அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

ராஜாஜி காலத்தில் தொடங்கி, எடப்பாடி பழனிசாமி வரை 12 முதலமைச்சர்களின் ஆட்சிக்காலத்தில் கருணாநிதி அரசியல் பணியாற்றியுள்ளார். சட்டப்பேரவையில், தி.மு.க. சட்டமன்றக் கட்சி தலைவர், எதிர்க் கட்சி துணைத் தலைவர், பொதுப் பணித் துறை அமைச்சர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்த பெருமை கருணாநிதிக்கு மட்டுமே உண்டு.

 

Trending News