கூடங்குளம் விரிவாக்கத் திட்டத்தை கைவிட வேண்டும் -வைகோ அறிக்கை

கூடங்குளம் அணு உலைகளில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை அந்த வளாகத்தினுள் வைக்கக்கூடாது எனவும், கூடங்குளம் விரிவாக்கத் திட்டத்தை கைவிட வேண்டும் என மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 18, 2018, 01:47 PM IST
கூடங்குளம் விரிவாக்கத் திட்டத்தை கைவிட வேண்டும் -வைகோ அறிக்கை title=

கூடங்குளம் அணு உலைகளில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை அந்த வளாகத்தினுள் வைக்கக்கூடாது எனவும், கூடங்குளம் விரிவாக்கத் திட்டத்தை கைவிட வேண்டும் என மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

அதைக்குறித்து அவற் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- 

இந்தியாவை மட்டுமல்ல, அமெரிக்காவை, ஏன் உலகத்தையே இன்று அச்சுறுத்தும் மிக முக்கியமான விஷயம், அணுக்கழிவுகளை எப்படி கையாளுவது என்பதுதான்.

“கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை என்ன செய்யப்போகிறீர்கள்?” என்கிற கேள்வி உச்ச நீதிமன்றத்தில் முக்கியமாக பூவுலக நண்பர்கள் கொடுத்த வழக்கில் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய அரசு, “கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கோலார் தங்கவயலில் வைக்கப் போவதாக” உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இது நடந்தது ஒரு வெள்ளிக்கிழமை, அந்தத் தகவல் உடனே ஊடகங்கள் மூலமாக எல்லாப் பகுதிகளுக்கும் சென்றது. (ஒரு அணு உலை வருடம் ஒன்றுக்கு சுமார் 30 டன் கழிவுகளை உற்பத்தி செய்யும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்).

வைகோ மீது தாக்குதல் முயற்சி அவைத் தலைவர் கண்டனம்

தமிழகத்தில் எந்த எந்த கட்சிகள் எல்லாம் அன்றைக்குக் கூடங்குளம் அணு உலைகளை ஆதரித்தனவோ அவை எல்லாம் கர்நாடகாவில் ஒன்றிணைந்து “கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளைக் கோலாரில் மட்டுமல்ல - கர்நாடகாவின் எந்த பகுதியிலும் வைக்க அனுமதிக்கமாட்டோம்,” என்று போராட்டம் நடத்தின. இந்தப் போராட்டம் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் நடந்தது. அடுத்த திங்கட்கிழமை, “கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கர்நாடகாவிற்கு கொண்டு போகப் போவதில்லை” என்று அதே மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் “வாக்குமூலம்“ ஒன்றை தாக்கல் செய்தது. இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கான கட்டமைப்புகளை ஐந்து வருட காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று 2013-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

அணுக்கழிவுகளை கையாள Away from Reactor (AFR) மற்றும் Deep Geological Repository (DGR) என இரண்டு வகையான கட்டமைப்புகளை உருவாக்கவேண்டும். அதாவது, அணுக்கழிவுகளை குறுகிய காலத்திற்குப் பாதுகாத்து வைக்க, அணு உலைகள் இருக்கும் இடத்தில் இருந்து தொலைவில் ஒரு இடமும், அணுக்கழிவுகளை நிரந்தரமாகப் பாதுகாக்க “ஆழ் நில கருவூலமும்” உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

உச்ச நீதிமன்றம் கொடுத்த ஐந்து வருட காலம் இந்த ஆண்டு மே மாதத்துடன் முடிவுற்றது. உச்ச நீதிமன்றத்தை நாடிய “தேசிய அணு மின்கழகம்”, கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளைத் தாங்கள் கூடங்குளம் அணு உலை வளாகத்திலேயே வைக்கப் போவதாகவும், அதற்குரிய தொழில்நுட்பம் தங்களிடம் இல்லையெனவும் தெரிவித்து மேலும் கால அவகாசத்தை ஐந்து ஆண்டுகள் நீட்டித்துத் தரக் கோரியுள்ளது. கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கையாளுவது சவால் மிகுந்தது என்றும் நம் நாட்டில் இதுவரை இதைக் கையாளுவதற்கான தொழில்நுட்பம் இல்லையெனவும் தெரிவித்துள்ளது.

இந்தப் பின்னணியில் 3 மற்றும் 4-ஆவது உலைகளுக்கான வேலைகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. 5 மற்றும் 6-ஆவது உலைகளுக்கான இறுதி பேச்சுவார்த்தைகளை வரும் வாரங்களில் மாஸ்கோ செல்லும் பிரதமர் மோடி நடத்தி முடிப்பார்.

தமிழக ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும் - வைகோ!

அணு உலைக்கழிவுகளை நிரந்தரமாகப் புதைத்து வைக்க சரியான இடத்தைத் தேர்வு செய்ய அமெரிக்கா கடந்த 40 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறது. அமெரிக்காவில் அதிக கதிர்வீச்சு கொண்ட அணு உலைக்கழிவுகள் சுமார் 90,000 டன்கள் உள்ளன, அங்கே இயங்கும் 100 உலைகளில் இருந்து வருடத்திற்கு 2,000 டன் கழிவுகள் புதிதாக உற்பத்தியாகின்றன. இந்த பின்னணியில் தான், அணு உலைக்கழிவுகளை நிரந்தரமாகப் பாதுகாக்க “ஆழ் நில கருவூலம்“ அமைக்கும் வரை புதிதாக எந்த அணு உலைகளையும் துவக்கக் கூடாது என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது,

அணுக்கழிவுகளின் ஆபத்துக்களை புகுஷிமா அணு உலை விபத்துகளில் இருந்து உலகம் உணர்ந்து கொண்டு விட்டது.

எனவே, கூடங்குளம் அணு உலைகளில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை அந்த வளாகத்தினுள் வைக்கக்கூடாது என்றும், பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து அதற்கு உரிய தொழில்நுட்பத்தை முடிவு செய்து கட்டமைக்கும் வரை கூடங்குளத்தில் தற்போது உள்ள இரண்டு அணு உலைகளையும் இயக்கக் கூடாது என்றும், மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது என்று விரியும் கூடங்குளம் விரிவாக்கத் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Trending News