தகவல் தொடர்புக்கு பயன்படும், 'ஜிசாட்- 6 ஏ' செயற்கைக்கோள், ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் வாயிலாக இன்று மாலை விண்ணில் செலுத்தப்பட்டது.
சந்திரனை பற்றி ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்) சந்திரயான்-1 விண்கலத்தை கடந்த 2008-ம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது.
அது சந்திரனுக்கு அருகே சென்று சுற்றியபடி, சந்திரனை பற்றிய பல தகவல்களை பூமிக்கு அனுப்பியது. அதையடுத்து சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டம் ரூ.800 கோடி செலவில் செயல்படுத்தப்பட இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
சந்திரயான்-2 விண்கலத்தை அடுத்த மாதம் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது. இது பற்றி விண்வெளி ஆய்வுத்துறை இலாகாவை கவனிக்கும் பிரதமர் அலுவலக விவகார துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் கடந்த 16-ந் தேதி நிருபர்களிடம் கூறுகையில், சந்திரயான்-2 விண்கலம் ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவப்படும் என்றும், அதில் உள்ள இறங்கு வாகனம் சந்திரனின் தென் பகுதியில் தரை இறங்கி ஆய்வு மேற்கொள்ளும் என்றும் கூறினார்.
இதையடுத்து, இஸ்ரோ தலைவர் கே.சிவன் 29-ந் தேதி ஜி.எஸ்.எல்.வி-யின் ஜி.சாட்-6 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது என தெரிவித்திருந்தார். இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான 27 மணி நேர 'கவுண்டவுன் ' நேற்று பிற்பகல் துவங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'இஸ்ரோ' சார்பில், பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன.
தகவல் தொடர்பு வசதிக்கான அதிநவீன 'ஜிசாட்- 6 ஏ' என்ற செயற்கைக்கோளை 'இஸ்ரோ' வடிவமைத்து உள்ளது. இந்த செயற்கைக்கோள் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை சரியாக 4:56 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. எப் -8 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
#FLASH: ISRO launches GSLV-F08 carrying the GSAT6A communication satellite from AP's Sriharikota. pic.twitter.com/sTmkDyS6Bi
— ANI (@ANI) March 29, 2018
தற்போது செலுத்தப்பட உள்ள ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி ரகத்தில் 12-வது ராக்கெட். இந்த ராகெட் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கபட்டுள்ள ஆறாவது 'கிரையோஜெனிக் இன்ஜின்' பொருத்தப்பட்டுள்ளது.
'ஜி-சாட் 6 ஏ' செயற்கைக்கோள்: இந்த செயற்கைக்கோள் 2,140 கிலோ எடை கொண்டது. ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்ட 17-வது நிமிடத்தில் பூமிக்கு அருகில் 170 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்படும். இந்த செயற்கைக்கோளில் அலைபேசி தகவல் தொடர்புக்கு பயன்படும் சக்தி வாய்ந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.