பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக, விங் கமாண்டர் அபிநந்தனின் படைப்பிரிவினருக்கு சிறப்பு பேட்ஜ்களை வழங்கி விமானப்படை கவுரவித்துள்ளது!!
கடந்த மாதம் 17 ஆம் தேதி பாகிஸ்தானின் F16 விமானத்தை சுட்டு வீழ்த்திய தமிழக வீரர் அபிநந்தன் நான்கு வாரம் விடுமுறைக்குப் பின்னர் மீண்டும் ஸ்ரீநகரில் உள்ள தமது அணியில் இணைவதற்காக திரும்பியுள்ளார். மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் அவர் மீண்டும் பணியாற்ற அனுமதிக்கப்படுவார். பாகிஸ்தானால் சிறைப் பிடிக்கப்பட்ட அபிநந்தன் இந்தியா மற்றும் உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் அரசால் விடுவிக்கப்பட்டார். ஆனால், இரண்டு நாட்கள் அங்கு பிணைக்கைதியாக அடைக்கப்பட்டிருந்த அபிநந்தனிடம் நடத்தப்பட்ட சித்ரவதை மற்றும் விசாரணை குறித்து விமானப் படையினர் 2 வாரகாலமாக அபிநந்தனிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணைக்குப் பின்னர் விடுமுறையில் செல்ல அபிநந்தனுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்நிலையில் விடுமுறை முடித்து ஸ்ரீநகர் திரும்பிய அபிநந்தன் கடந்த மாதம் 27 ஆம் தேதி மீண்டும் பணியில் இணைந்தார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் ராஜஸ்தானில் உள்ள சூரத்கர் விமானப் படை தளத்தில் மீண்டும் பணியில் சேர்ந்தார்.
இதனிடையே அவரது படைப்பிரிவுக்கு 'ராஜாளிகளை வீழ்த்துபவன்' என்ற பொருளமைந்த 'பால்கன் ஸ்லேயர்' என்ற சிறப்பு பேட்ஜ்களை, வழங்கி இந்திய விமானப்படை அவரை பெருமைப்படுத்தியுள்ளது. அதில் சிவப்பு நிற எஃப் 16 ரக விமானம் மீது, குறிவைக்கப்பட்டிருப்பது போன்ற அடையாளம் பொறிக்கப்பட்டுள்ளது. அபிநந்தனின் வீர தீர செயலுக்காக, அவரது படைக்கு இந்த சிறப்பு 'பேட்ஜ்' வழங்கியதாக இந்திய விமானப்படை விளக்கம் அளித்துள்ளது.