மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, ஜி.எ.ஸ்டி. திட்டங்களுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதால் பட்ஜெட்டின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் பொருளாதாரத்தை மையமாக திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுமா? கார்ப்பரேட் வரி மற்றும் வருமான வரியில் ஏதாவது மாற்றம் செய்யப்படுமா? ஊரக வளர்ச்சி மற்றும் விவசாயத்திற்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும். அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் எந்த மாதிரியான பட்ஜெட் அறிவிக்கப்படும் போன்ற மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டம்!
மேலும் இந்த வருடம் எட்டு மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அதை மனதில் வைத்து தான் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் என எதிர் பார்க்கப்படுகிறது.
வருமான வரி
தற்போது 2.5 லட்ச ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு அதிகரிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதனால் வருமான வரி கட்டும் நடுத்தர மக்கள் மிகவும் பயனடைவார்கள். மேலும் மறைமுக வரியான சுங்க வரியில் மாற்றம் வருமா? என எதிர் பார்க்கப்படுகிறது.
கார்ப்பரேட் வரி
இந்திய தொழில் நிறுவனங்களோ, கார்ப்பரேட் வரியை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. வருமான வரி கட்டுவதை எளிதாக்கியும், அதிகமானோரை வருமான வரி கட்ட வைக்கும் திட்டங்களை கொண்டு வந்தது மத்திய அரசு கார்ப்பரேட் வரி வசூல் 34.45 சதவீதத்தில் இருந்து 28.18 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமான வரியை அதிபர் டொனால்டு டிரம்ப் 35 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக குறைத்து உள்ளார். எனவே தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் கார்ப்பரேட் வரி குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரக வளர்ச்சி மற்றும் விவசாயம்
நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்காக கடந்த நிதியாண்டில் மேக் இன் இந்தியா, உள்கட்டுமான திட்டங்கள் எனப் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதேவேளையில் ஊரக வளர்ச்சி அவ்வளவாக திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. மேலும் விவசாயிகளின் துயரம் தீரவில்லை. தற்கொலையும் அதிகரித்து வண்ணம் உள்ளன. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
ரயில்வே பட்ஜெட்
இந்த முறை ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய நோக்கமாக பயணிகள் பாதுகாப்பு இருக்கும் எனவும், ரயில் விபத்துக்களை தவிர்க்கும் நோக்கத்தில், ஆளில்லா லெவல் க்ராஸிங்குகளை நீக்கவும், ரயில் தடங்களை புதுப்பிக்கவும் நிதி ஒதுக்கப்படும் என ம்,மத்திய அரசு கூறியுள்ளது. ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் 8 கேமராக்கள் மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அரசு தெரிவித்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் தெரிவித்துவிடும். கடந்த ஆண்டில் அதிக அளவிலான ரயில் விபத்துகள் நடைபெற்றுள்ளதால், அதனை கருத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.