அமெரிக்க அதிபர் இன்று இந்தியா வந்துள்ளார். இதற்கு முன்பு அமெரிக்க அதிபராகப் பதவி வகித்த 6 பேர் இந்தியாவுக்கு வந்துள்ளனர். அவர்களின் விவரங்கள் இதோ.,
டுவைட் டி. ஐசனாவர், 1959
முன்னாள் அதிபர் ஐசன்ஹோவர் இந்தியாவுக்கு விஜயம் செய்த முதல் அமெரிக்க அதிபர் ஆவார். அவரது வருகையின் நோக்கம் அமைதிக்கான பொதுவான தேடலை அடையாளப்படுத்துவதும், நிராயுதபாணியான தேவைகளை ஆராய்வதும் ஆகும். அப்போது ஐசனோவர் ராம்லீலா மைதானத்தில் ஒரு பொது உரை நிகழ்த்தினார் மற்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றினார். பின்னர் அவர் தாஜ்மஹாலைப் பார்வையிட்டார், மேலும் லார்ம்டா என்ற கிராமத்திலும் நிறுத்தினார்.
ரிச்சர்ட் நிக்சன், 1969
கடந்த 1969-ஆம் ஆண்டில் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அதிபர் ரிச்சா்டு நிக்சன் இந்தியாவுக்கு வருகை தந்தாா். மீண்டும் அணிசேரா இயக்கத்தை இந்தியா வழிநடத்தியதால், இந்திரா காந்தியை சமாதானப்படுத்தும் முயற்சியாக அவர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.
ஜிம்மி காா்ட்டா், 1978
கடந்த 1978-இல் மொராா்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, அமெரிக்க அதிபராக இருந்த ஜிம்மி காா்ட்டா் இந்தியா வந்தாா். இந்தப் பயணத்தின்போது அணுசக்தி ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் மொராா்ஜி தேசாயிடம் கையெழுத்து பெறவேண்டும் என்பது ஜிம்மி காா்ட்டரின் நோக்கம். ஆனால், அந்த ஒப்பந்தத்தில் தேசாய் கையெழுத்திட மறுத்துவிட்டாா்.
பில் கிளிண்டன், 2000
கடந்த 2000-ஆம் ஆண்டில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இந்தியா வந்தார். அதற்கு முன்பு கார்கில் போரின்போது கிளிண்டன் தலையிட்டு, பாகிஸ்தான் படைகளைத் திரும்பப் பெறுமாறு அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீஃபை வலியுறுத்தினார். அதன்பிறகு, அமெரிக்காவின் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு மாறத் தொடங்கியது. இந்தியா வந்த அவர் நாடாளுமன்றத்தில் கௌரவிக்கப்பட்டார்.
ஜாா்ஜ் புஷ், 2006
கடந்த 2006-ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அமெரிக்க அதிபர் ஜாா்ஷ் புஷ் இந்தியா வந்தார். ஜார்ஜ் புஷ்ஷின் இந்தப் பயணத்தின்போதுதான், இந்தியா அணுசக்தி திட்டங்களை செயல்படுத்துவதற்கு அனுமதி அளிப்பதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
பராக் ஒபாமா, 2010
அமெரிக்க அதிபராகப் பதவி வகித்த ஒபாமா இரண்டு முறை இந்தியா வந்துள்ளார். முதலாவதாக, கடந்த 2010-இல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது வந்தார். அப்போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக இடம்பெறுவதற்கு ஆதரவு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஒபாமா கலந்து கொண்டாா்.
டொனால்ட் டிரம்ப், 2020
அமெரிக்க அதிபரான டிரம்ப், இந்தியாவுக்கு வருகை இன்று தந்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மனைவி மெலனியா டிரம்ப் மற்றும் மகள், மருமகளுடன் இந்தியா வந்தடைந்தார்.