நாடு முழுவதும் 60.03% வாக்குகள் பதிவு... 'இந்த' மாநிலம் தான் அதிகம் - இது பாஜகவுக்கு சாதகமா?

Lok Sabha Election 2024 Phase 1: நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நேற்று நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவில் மொத்தம் 60.03% வாக்குகள் பதிவாகி உள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Apr 20, 2024, 12:14 PM IST
  • மேற்கு வங்கத்தில்தான் நேற்று அதிக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
  • தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு கடந்த முறையை விட குறைந்துள்ளது.
  • வட கிழக்கு மாநிலங்களில் அதிக வாக்குகள் பதிவாகி உள்ளன.
நாடு முழுவதும் 60.03% வாக்குகள் பதிவு... 'இந்த' மாநிலம் தான் அதிகம் - இது பாஜகவுக்கு சாதகமா? title=

Lok Sabha Election 2024 Phase 1 Vote Turnout: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. முதல் கட்டமாக தமிழ்நாடு, ராஜஸ்தான், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 39 மக்களவை தொகுதிகளில் மட்டுமின்றி கன்னியாகுமரி விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியிலும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. 

60.03% வாக்குகள் பதிவு

அந்த வகையில், நாடு முழுவதும் நடைபெற்ற நேற்றைய முதல் கட்ட வாக்குப்பதிவில் பெருமளவில் மக்கள் வாக்களித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்திலும், மணிப்பூரிலும் வன்முறை சம்பவங்கள் நடந்தபோதிலும் நேற்றைய 102 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிவில் சராசரியாக 60.03 சதவீத மக்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

நேற்று நடந்த 102 தொகுதிகளின் வாக்குப்பதிவில் ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாட்டின் தொகுதிகளை சேர்த்தாலே பாதிக்கு மேற்பட்ட தொகுதிகள் வந்துவிடும் எனலாம். அதாவது, ராஜஸ்தானில் உள்ள மொத்தம் 25 தொகுதிகளில் நேற்று 12 தொகுதிகளுக்கும், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் என இதை சேர்த்தாலே 51 தொகுதிகள் வந்துவிடுகிறது. 

மேலும் படிக்க | Elections 2024 : ட்ரைவரை வாக்களிக்க அனுப்பி விட்டு... தானே வாகனத்தை ஓட்டி வந்து வாக்களித்த முதல்வர்..!!

தமிழ்நாட்டில் எவ்வளவு தெரியுமா?

குறிப்பாக, தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 72.4 சதவீத வாக்குகள் பதிவாகியது. ஆனால், 69.46 சதவீத வாக்குகளே பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் இன்று அதிகாலை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் கடந்த முறை 64 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், நேற்று 57.3 சதவீதமே பதிவானது. 

அதேபோல், உத்தர பிரதேசத்தில் நேற்றைய 7 மணி நிலவரப்படி 59.5 சதவீத வாக்குகளும், மத்திய பிரதேசத்தில் 66.7 சதவீத வாக்குகளும் பதிவாகின. நேற்று மேற்கு வங்கத்தில்தான் அதிக வாக்குகள் பதிவாகியிருந்தன. அங்கு 77.6 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இது பாஜகவுக்கு சாதகமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. கடந்த 2019இல் பாஜக மொத்தம் 42 தொகுதிகளில் 18இல் வெற்றி பெற்றது.

பாஜகவுக்கு சாதகம்

மேலும் பாஜக வலுவாக உள்ள வடகிழக்கு பிரதேசங்களில் நேற்று அதிக வாக்குகள் பதிவாகி உள்ளன. திரிபுராவில் 80.6 சதவீதமும், மேகாலயாவில் 74.5 சதவீதமும், அசாமில் 72.3 சதவீதமும், மணிப்பூரில் 69.2 சதவீதமும், அருணாச்சல பிரதேசத்தில் 67.7 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன. இதுவும் பாஜகவுக்கு பெரும் சாதகமாக அமையலாம். 

மக்களவை தேர்தலுடன் நேற்று சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேச சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் சிக்கிமில் கடந்த 2019இல் 81.4 வாக்குகள் பதிவான நிலையில் இந்த முறை 68 சதவீத வாக்குகளும், அருணாச்சல பிரதேசத்தில் கடந்த முறை 65.1 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 68.3 வாக்குகள் பதிவாகி உள்ளன.

பிரதமர் மோடி ட்வீட்

முதல் கட்ட வாக்குப்பதிவு குறித்து பிரதமர் மோடி நேற்றிரவு அவரது X பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில்,"முதல் கட்டம், சிறப்பான வரவேற்பு. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்குப்பதிவில் இருந்து சிறப்பான கருத்துக்களைப் பெற முடிகிறது. நாடு முழுவதும் உள்ள வாக்காளர்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கின்றனர் என்பது தெளிவாக தெரிகிறது" என குறிப்பிட்டிருந்தார். 

ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாடு முழுவதும் மொத்தம் 400 தொகுதிகளை கைப்பற்றி, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ளது. குறிப்பாக, இம்முறை தென் மாநிலங்களான கர்நாடகா, தமிழ்நாட்டில் பெருவாரியான இடங்களை பிடிக்க பாஜக முனைப்பு காட்டியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தேர்தல் விதிகளில் கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்த தேர்தல் ஆணையம் - சத்யபிரதா சாகு கொடுத்த அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News