ரஃபேல் போர் விமான விவகாரத்தில் அருண் ஜெட்லி கருத்து குறித்து விமர்சித்து ப.சிதம்பரம் ட்வீட்...!
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கு இந்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், விமானத்துக்கு அதிக பணம் கொடுத்து வாங்கப்படுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மேலும் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்துடன் இணைந்து டசால்ட் ஏவியேஷன் விமானங்களை தயாரிக்க உள்ளதாக ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் குழுமத்துக்கு ராணுவ விமானங்களுக்கான பாகங்களைத் தயாரிக்க போதுமான அனுபவம் இல்லையென்றும், மத்திய அரசு இந்த விவகாரத்தில் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது என்றும் காங்கிரஸ் தரப்பு கூறி வருகிறது.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்சாய்ஸ் ஹாலாண்டே, ‘ரஃபேல் ஒப்பந்தத்தைப் (Rafale Deal) பொறுத்தவரை இந்திய அரசு, அனில் அம்பானியின் நிறுவனத்துடன் மட்டும் தான் கூட்டு சேர்ந்து பணிகள் செய்யச் சொன்னது. எங்களுக்கு வேறு எந்த நிறுவனம் குறித்தும் சிபாரிசு செய்யப்படவில்லை’ என்று சமீபத்தில் பகீர் கருத்து கூறினார். அவரின் இந்தக் கருத்து ரஃபேல் விவகாரம் தொடர்பாக நிலவி வரும் சர்ச்சையை மேலும் அதிகரித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு பெரும் கட்சிகளும் வார்த்தை போர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், குறிப்பிட்டுள்ளதாவது... உண்மைக்கு இரண்டு முகங்கள் இருக்க முடியாது என்கிறார் நிதி அமைச்சர் திரு. ஜெட்லி. முற்றிலும் சரி. எந்த முகம் உண்மை முகம் என்று எப்படி கண்டு பிடிப்பது?. இதற்க்கு இரண்டு வழிகள் தான் இருக்கின்றன. ஒன்று, விசாரணைக்கு உத்தரவிடுவது. இரண்டு, நாணயத்தைச் சுண்டி பூவா, தலையா என்று பார்ப்பது. நிதி அமைச்சர் இரண்டாவது வழியை விரும்புகிறாரோ? என கேரிப்பிட்டுள்ளார்.
ரபேல் விமான உடன்பாட்டில் தவறு நடந்திருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டு பிடிப்பதற்கு விசாரணையைத் தவிர வேறு வழியில்லை.
— P. Chidambaram (@PChidambaram_IN) September 24, 2018
மேலும், ரபேல் விமான உடன்பாட்டில் தவறு நடந்திருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டு பிடிப்பதற்கு விசாரணையைத் தவிர வேறு வழியில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..!