இந்தியாவில் 1986 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு மசோதா சட்டம் அறிமுகப்படுத்தபட்டது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் கடந்த 32 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஆனால் அந்த சட்டத்தில் பல பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லப்படாததால், நுகர்வோர்களுக்கு சரியான தீர்வு காண முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் காலத்திற்கு ஏற்ப, இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை அடுத்து நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான புதிய மசோதாவை மத்திய அரசு விரைவில் கொண்டு வரும் என்று நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியிருந்தார்.
இதனையடுத்து புதிய நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவை மக்களவையில் கடந்த புதன்கிழமை தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான். ஆனால் அன்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இந்த புதிய மசோதா மீது விவாதம் நடத்து முடியவில்லை. மீண்டும் நேற்று இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது. அதன்பிறகு நுகர்வோர் பாதுகாப்பு புதிய மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநிலங்களவையின் ஒப்புதலுக்கு புதிய மசோதா அனுப்பப்படும். ஒருவேளை மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டால், அதன்பிறகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவர் ஒப்புதலை வழங்கினார் இந்த புதிய நுகர்வோர் பாதுகாப்பு மசோதா நடைமுறை படுத்தப்படும்.