குஜராத் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி அகில் குரேஷியை மத்திய பிரதேசத்திற்கு பதிலாக திரிபுரா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது!
இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலிஜியம் அமைப்பு, நீதிபதிகள் நியமனம், இடமாற்றம் தொடர்பான முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி நீதிபதி அகில் குரேஷியை மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு செய்ய முன்னதாக கொலீஜியம் முடிவு செய்திருந்தது.
எனினும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.ஏ.போப்டே மற்றும் நீதிபதி எஸ். அப்துல் நசிர் ஆகியோர் மறுபரிசீலனை செய்த பின்னர் பட்டியல் உச்சநீதிமன்ற அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும் சட்ட அமைச்சகம் மற்றும் தொழில்நுட்ப தடை காரணமாக இந்த இறுதி பட்டியல் இணைய பக்கத்தில் வெளியிடப்படுவில்லை. இருப்பினும், கொலீஜியத்தின் இந்த முடிவை அரசாங்கம் இனி எதிர்க்காது, அதற்கான பரிந்துரை அடுத்த வாரம் அங்கீகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே நீதிபதி அகில் குரேஷியை தலைமை நீதிபதியாக நியமிக்கக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குழுவும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. மனுவுக்கு காரணம், நீதிபதி குரேஷியுடன், பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நியமிக்கப்படவிருந்த மற்ற நீதிபதிகளும் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். நீதிபதி குரேஷி நியமனம் தொடர்பான விஷயம் மட்டுமே நிலுவையில் இருந்தது.
இந்நிலையில் தற்போது அகில் குரேஷியை மத்திய பிரதேசத்திற்கு பதிலாக திரிபுரா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.