புதுடெல்லி: நாடு முழுவதும் தேர்வு செய்யப்படும் 100 ஸ்மார்ட் நகரங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு வீட்டு வாடகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
எகனாமிக் டைம்ஸ் புதிய வாடகை வீடுகள் கொள்கை, குறிப்பாக வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு 100 ஸ்மார்ட் நகரங்களில் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று தகவல் கொடுத்துள்ளது.
மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் ஒரு பகுதியாக, நகர்ப்புறங்களில் வசிக்கும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு அரசே வீட்டு வாடகை வழங்க முடிவு செய்துள்ளது. இத்திட்டத்திற்காக மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.2700 கோடி ரூபாய் நிதி ஒதுக்க உள்ளது.
நகர்ப்புறங்களில் வசிக்கம் ஏழைகளுக்கு மாதந்தோறும் வீட்டு வாடகை தொகை வவுச்சர் (voucher) மூலம் வழங்கப்படும். இந்த வவுச்சரை, அவர்கள் வங்கியில் நேரடியாக கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளலாம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் 100 நகரங்களில் மட்டும் இந்த வீட்டு வாடகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகு முதல் கட்டமாக ஏழைகளுக்கு வீட்டு வாடகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து பினாமி சொத்துக்களை கைப்பற்றும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன