மும்பை: சிவசேனா (Shivsena) தனது சாம்னா (Saamana) பத்திரிகை மூலம் மீண்டும் ஒருமுறை பாரதீய ஜனதா கட்சியை (Bharatiya Janata Party) கடுமையாக விமர்சித்துள்ளது. ஒரு சமயத்தில் அண்ணன்-தம்பி போல உறவோடு இருந்த கட்சி, இன்று, பிஜேபியை (BJP) 105 இடங்களை கொண்ட சுத்தி சுவாதீனம் இல்லாத கட்சி என்று கடுமையான வாரத்தைகளால் தாக்கி உள்ளது. மேலும் பாஜகவை கிண்டல் செய்யும் விதத்தில், மாநிலத்தில் சிவசேனா அரசு அமைக்கப் போகிறது என்ற செய்தி வெளிவந்ததிலிருந்து, சிலருக்கு வயிற்று வலி வரத் தொடங்கியுள்ளதாக என்று தனது சொந்த பத்திரிகையான சமனா-வில் எழுதியுள்ளது.
சாம்னா தலையங்கம் (Saamana Editorial) பத்திரிகையில், "பாஜக தங்கள் பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்காக மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுகிறது, இந்த செயல் அவர்களின் மன நிலைக்கு ஆபத்தானது" என்று எழுதியுள்ளது.
பாஜகவுக்கு மோடியின் பெயரில் வாக்குகள் கிடைத்து வருகிறது. ஆனால் தற்போது பாஜகவின் நடவடிக்கையால் மோடி ஜியின் பெயர் கெட்டுப்போகிறது. மேலும் சாம்னா மூலம் கேள்வி எழுப்பிய சிவசேனா, மாநிலத்தில் அரசாங்கத்தை அமைக்க பெரும்பான்மை இல்லாமல் ஆளுநரிடம் ஆட்சி அமைக்கும் கோரிக்கையை வைக்க முடியாமல் இருந்த பாஜக, தற்போது ஜனாதிபதியின் ஆட்சி திணிக்கப்பட்ட பின்னர், திடீரென பாஜக எவ்வாறு அரசாங்கத்தை அமைப்பதாகக் கூறுகிறது? என்க் கேட்டுள்ளது. பாஜகவுக்கு அதிகார மோகம் பைத்தியம் என்று சிவசேனா கூறியதுடன், பைத்தியக்காரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அரசின் நற்பெயருக்கு ஒரு தடையாகும் என்றும் கூறியுள்ளது.
மஹாராஷ்டிராவில் (Maharashtra) ஆட்சி அமைப்பதற்கு தீவிரமாக முயற்சித்து வரும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே அமைச்சரவையில் ஒதுக்கப்படும் இடங்கள் குறித்து பேசி முடிவுக்கு வந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இம் மூன்று கட்சிகளிடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி அமைச்சரவையில் சிவசேனாவுக்கு 16 அமைச்சர் பதவிகளும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ்-க்கு 14 பதவிகளும், காங்கிரசுக்கு 12 பதவிகளும் ஒதுக்கப்படுவதாக பேசி முடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று காங்கிரசுக்கு சபாநாயகர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதாம். துணை சபாநாயகர் பதவி சிவசேனாவுக்கும், சட்டசபை கவுன்சில் தலைவர் பதவி தேசியவாத காங்கிரசுக்கும், அதன் துணை தலைவர் பதவி சிவசேனாவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், மராட்டியத்தில் சிவசேனாவை சேர்ந்தவரே முதல்வராவதை யாரும் தடுக்க முடியாது என சஞ்சய் ராவத் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மராட்டிய மாநிலத்தின் அரசியல் நிலவரம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அரசியலிலும் கிரிக்கெட்டிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சில நேரங்களில் தோற்பது போல் இருக்கும், போட்டியின் முடிவில் திடீரென தலைகீழாக மாற வாய்ப்பிருக்கிறது. டெல்லியில் இருந்து இப்போது தான் வந்திருக்கிறேன். அதனால் மராட்டிய மாநிலத்தில் நடக்கும் அரசியல் பற்றி எனக்கு தெரியாது என்றார்.
மகாராஷ்டிராவின் 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பாஜகவுக்கு 105, சிவசேனா 56, என்சிபி 54, காங்கிரஸ் 44 இடங்கள் உள்ளன. மற்ற இடங்களில் சிறிய கட்சி மற்றும் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளன.