பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜகவினர் தேர்தல் விதி மீறினால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு!!
நாடு முழுவதும் 17வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொ, ண்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் விதிகளை மீறி மத, சாதி ரீதியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் காங்கிரஸ் கட்சி சார்பில் சுஷ்மிதா தேவ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த புகாரில், தேர்தல் பரப்புரையில் பிரதமரோ, அவர் கட்சியை சேர்ந்தவர்களோ நாட்டின் ராணுவத்தை உரிமை கொண்டாடக் கூடாது என்பது தேர்தல் விதி. ஆனால் விதியை மீறி பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் பாஜகவினர் தேர்தல் ஆதாயத்துக்காக, புல்வாமா தாக்குதல், அபிநந்தன் விவகாரம் போன்றவற்றை பேசிவருகின்றனர்.
இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் கோரிக்கையாக வைக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு நாளை விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்தார். மேலும், பிரதமர் மீதான வழக்குகளை முறையிடும் போதும் வாதங்களை முன்வைக்கும் போதும் பிரதமரின் பெயரை குறிப்பிட வேண்டும் என்றும், பிரதமரின் பெயரை குறிப்பிடாமல் வழக்கறிஞர்கள் கண்ணாமூச்சி விளையாடாதீர்கள் என நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.