இன்று நடக்க உள்ள சந்திர கிரகணம், 152 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அரிய நிகழ்வு என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதை, வெறும் கண்களால் பார்க்கலாம் என அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.
பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தொலைவு சுமார் 3.84 லட்சம் கி.மீ. பூமியின் ஒரு பக்கம் சூரியனும் மறுபக்கம் சந்திரனும் ஒரே நேர் கோட்டில் வரும் நிகழ்வுகள் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும். அப்போது 'சூப்பர் மூன்' உருவாகிறது. அது, சாதாரணமாக தெரியும் நிலவை விட, 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும் இருக்கும். 2-வது முழு நிலவு: 'தானாக ஒளியை வெளியிடும் சக்தி, நிலவுக்குக் கிடையாது. நிலா தன் மீது விழும் சூரிய ஒளியை மட்டும்தான் பிரதிபலிக்கிறது. சந்திர கிரகணம் என்பது சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமி வரும் போது ஏற்படுகிறது.
இதனால், சூரியன் - பூமி - நிலவு ஆகியவை நேர் கோட்டில் வரும்போது சூரியனின் ஒளி நிலவின் மீது படாத நிலை ஏற்படுகிறது. இதை சந்திர கிரகண நிகழ்வு என்கிறோம். இது குறித்து தமிழக அறிவியல் தொழில் நுட்ப மைய இணை இயக்குனர், சந்திரராஜன் கூறியது:- ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது முழுநிலவு, 'புளு மூன்' என அழைக்கப்படுகிறது. அபூர்வமாக இந்த நிகழ்வு ஏற்படுவதால் இப்படி அழைக்கப்படுகிறது.
புளு மூன் என்றவுடன் நிலவு நீல நிறத்தில் தெரியும் எனக் கருத வேண்டாம். அப்படி இருக்காது. விண்வெளியில் உள்ள மாசை பொறுத்து இந்த சந்திரன் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் காணப்படலாம். இந்த அபூர்வ சந்திரகிரகணம், 152 ஆண்டுகளுக்குப்பின் இன்று நடக்கிறது. இது, உலக அளவில், வட அமெரிக்கா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தெரியும்.
இந்த கிரகணம் இந்தியாவில் இன்று மாலை 5:15 மணிக்கு சந்திர கிரகணம் துவங்குகிறது. சென்னையில், சந்திரன் மாலை, 6:05 மணிக்கு உதிக்கும். மாலை, 6:22 முதல், இரவு, 7:38 வரை முழு கிரகணம் இருக்கும். இரவு, 7:39 மணி முதல், நிழல் விலக ஆரம்பித்து 8:43 மணிக்கு முழுமையாக விலகி விடும்.
இரவு 9:38 மணிக்குப்பின் நிலவு, அதன் முழு ஒளியுடன் ஜொலிக்கும். இந்த நிகழ்வை பாதுகாப்பு கண்ணாடிகள் அணியாமல் வெறும் கண்களால் பார்க்கலாம். இன்று நடக்கும் சந்திர கிரகணத்தை சென்னை, கோவை, திருச்சி, வேலுார் ஆகிய அறிவியல் தொழில்நுட்ப மையங்களில், பொதுமக்கள் பார்வையிட, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
சந்திர கிரகணம்த்தை முன்னிட்டு பரிகார பூஜை செய்யப்பட்டு, கோவில்களில் நடை திறக்கப்படும். இன்று மாலை ஏற்படும் இந்த கிரகணம் இரவு வரை நீடிக்கிறது. கிரகணம் முடிந்த பின் நீராடி சந்திரனை தரிசனம் செய்வது நன்மையளிக்கும்.
புதன்கிழமை பிறந்தவர்களும், புனர்பூசம், பூசம், ஆயில்யம், விசாகம், கேட்டை, பூரட்டாதி, அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், பரிகார அர்ச்சனை செய்ய வேண்டும். ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர். அடுத்த சந்திர கிரஹணம் ஜூலை, 27ல் நடக்கிறது. தைப்பூச திருவிழா பழநியில் ஜன., 25 முதல் பிப்., 3 வரை நடக்கிறது.
இன்று மாலை 6:22 மணி முதல் இரவு 8:40 மணி வரை சந்திரகிரகணம் ஏற்படுவதால். வழக்கமான ஆறு காலபூஜைகளும் முன்கூட்டியே நடக்கிறது. மதியம் 2:45 மணிக்கு சாயரட்சை பூஜை செய்து 3:45 மணிக்கு நடைசாத்தப்படுகிறது. இதனால் மதியம் 12:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக அனுமதிக்கப்படுவர்.