பம்பை, நிலக்கல்,சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் நாளை வரை 144 தடை உத்தரவு நீடிக்கும் என கேரளம் மாநிலம் பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் நூஹ் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தின் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் வரலாற்று தீர்ப்பினை வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் ஆண்கள் மட்டுமின்றி ஏராளமான பெண்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் ஐப்பசி மாத புஜைக்காக ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
கோயிலுக்கு வரும் வழியிலேயே பெண் பக்தர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கேரளம் மாநிலம் பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் நூஹ் கூறியதாவது:-
பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் நாளை வரை 144 தடை உத்தரவு நீடிக்கும். சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.