டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம்: கெஜ்ரிவால்

டெல்லி வன்முறையால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்குவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!!

Last Updated : Feb 27, 2020, 06:18 PM IST
டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம்: கெஜ்ரிவால் title=

டெல்லி வன்முறையால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்குவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு இடையே, டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மோதல் வெடித்தது. இந்த மோதல் கலவரமாக உருவெடுத்ததை அடுத்து தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் வீடுகள், கடைகள், வாகனங்கள் கல்வீசி தாக்கப்பட்டன.

சில வாகனங்கள், கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி போலீசார் மட்டுமின்றி, துணை ராணுவப்படையினர், அதிரடிப் படையினர் கலவரம் பாதித்த பகுதிகளில் குவிக்கப்பட்டனர். தற்போதுவரை லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் இருவரும், ஜேபிசி மருத்துவனையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். குருதேஜ் பகதூர் மருத்துவமனையில் 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களுள் ஒரு பெண் உட்பட 9 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 200-க்கும் மேற்பட்டோர், படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காயமடைந்த பெரும்பாலானோர் கலவரக்காரர்களிடமிருந்து தப்பிக்கும் பொழுது கீழே விழுந்து காயமடைந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு அமலில் உள்ள வடகிழக்கு டெல்லியில் தற்போது 45 கம்பெனி துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் மவுஜ்பூர், ஜாப்ராபாத், சீலம்பூர், பார்பர்பூர் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. கலவரம் தொடர்பாக 106 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை CAA-க்கு ஆதரவான பேரணியில், BJP தலைவர் கபில் மிஸ்ரா சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததை அடுத்து, கலவரம் வெடிக்க வாய்ப்பிருப்பதாக டெல்லி போலீசார், 6 முறை எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கலவரத்துக்கு இடையே கடந்த திங்களன்று கஜூரி காஸ் பகுதியில் தேர்வெழுத சென்ற 8 ஆம் வகுப்பு மாணவி, காணாமல் போயுள்ளார்.

டெல்லியில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற சமயங்களில், அங்குள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு நிமிடத்திற்கு 4 பேர் என்கிற வீதத்தில் தொடர்ந்து அவசர அழைப்புகள் வந்து கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் திங்கட்கிழமை மட்டும், 3 ஆயிரத்து 300 அவசர அழைப்புகள் வந்ததாகவும், செவ்வாய்க்கிழமையன்று 7 ஆயிரத்து 520 அழைப்புகள் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு 225 அழைப்புகள் என மொத்தமாக 2 நாட்களில் 10 ஆயிரத்து 820 அவசர அழைப்புகள் வந்துள்ளன. வன்முறை, தீவைப்பு, கல்வீச்சு, தாக்குதல் உள்ளிட்டவை குறித்து தெரிவிக்க அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் இந்த அழைப்புகளை விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில், டெல்லி வன்முறையில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீடுகள் முற்றிலுமாக எரிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ .5 லட்சம் வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். இழந்த உடமைகளுக்கு குத்தகைதாரர்களுக்கு தலா ரூ .1 லட்சமும், வீட்டு உரிமையாளர்களுக்கு தலா ரூ .4 லட்சமும் வழங்கப்படும். வீடுகளில் கணிசமான சேதம் ஏற்பட்டாலும் முழுமையாக எரிக்கப்படாதவர்களுக்கு தலா ரூ .2.5 லட்சம் வழங்கப்படும்.

அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், தங்களின் கடைகள் அகற்றப்பட்டவர்களுக்கு தலா ரூ .5 லட்சமும், வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணமாக தலா ரூ .25,000 வழங்கப்படும். டெல்லி கலவரத்தில் ஒரு நபர் ஒரு விலங்கை இழந்திருந்தால், அவர்கள் இழந்த ஒவ்வொரு விலங்குக்கும் ரூ .5,000 வழங்கப்படும். ரிக்‌ஷாவுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு தலா ரூ.25,000 தில்லி அரசு தலா ரூ.50 ஆயிரம் ஈ-ரிக்‌ஷாக்களுக்கு சேதம் விளைவிப்பதாக உறுதியளித்துள்ளது.
 
மேலும், வன்முறையில் காயமடைந்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு அரசின் திட்டத்தின்கீழ் இலவசமாகச் சிகிச்சை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். வன்முறைக்குக் காரணமானவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கப்படும் என்றும், அவர்கள் ஆம் ஆத்மிக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் இருமடங்கு தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவித்தார். தேசியப் பாதுகாப்பை அரசியல் ஆக்கக் கூடாது எனவும் கேஜ்ரிவால் தெரிவித்தார். 

 

Trending News