National News In Tamil: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சைக்கு பெயர்போன ஒன்றாக விளங்குகிறது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரம் சிங், 5 மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்து துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவரது மீதான குற்றச்சாட்டுகள் புனைப்பட்டதாக டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவர் பாஜகவின் முன்னாள் மக்களவை உறுப்பினரும் ஆவார்.
பிரிஜ் பூஷன் சிங் மீதான குற்றச்சாட்டுகளுக்கு வெளிப்படையான விசாரணை வேண்டும் என மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். பிரிஜ் பூஷன் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல வீரர், வீராங்கனைகள் டெல்லி வீதிகளில் உண்ணாவிரதம் இருந்து போராட்டம் நடத்தினர். குறிப்பாக, பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் 50 நாள்களுக்கு மேலாக போராட்டம் நடத்தினர். மேலும், டெல்லி வீதிகளில் இரவு பகல் பாராமல் போராடியும் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என மல்யுத்த வீரர், வீராங்கனைகள் ஏமாற்றம் தெரிவித்தனர்.
கண்ணீர் வடித்த சாக்ஷி மாலிக்
இதுமட்டுமின்றி, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து பிரிஜ் பூஷன் விலகிய பின்னர், அவரது சார்பில் சஞ்சய் சிங் என்பவர் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். தலைவராக ஒரு பெண் தேர்வு செய்யப்பட வேண்டும் என போராட்டம் நடத்திய வீரர், வீராங்கனைகள் கூறினாலும் அந்த கோரிக்கையும் தவிடுபொடியானது.
இதை தொடர்ந்து மல்யுத்த போட்டிகளில் இருந்தே ஓய்வு பெறுவதாக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கண்ணீர் மல்க அறிவித்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சாக்ஷி மாலிக் 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவர் மட்டுமே ஒலிம்பிக்கில் இந்திய சார்பில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை ஆவார்.
மேலும் படிக்க | ஒலிம்பிக்கில் எனக்கு சதி நடக்கும் என 3 மாதங்களுக்கு முன்பே சொன்ன வினேஷ் போகத்..!
பதக்கமும், தகுதிநீக்கமும்
இத்தனை தடைகள் மத்தியில் தற்போது நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மொத்தம் 6 மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். அதில் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய வினேஷ் போகத்தும் ஒருவர் ஆவார். கடந்த 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடரில் இருந்து மல்யுத்தத்தில் குறைந்தபட்சம் இந்தியா ஒரு பதக்கத்தையாவது வென்றுவிடும்.
அந்த வகையில், இந்த முறை ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவில் அமான் ஷெராவத் வெண்கலம் வென்றார். மகளிர் 50 கிலோ எடைப்பிரிவில் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், எடை சர்ச்சை காரணமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டார். தற்போது விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் கூட்டு வெள்ளிப் பதக்கம் வேண்டி வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், இதன் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த தீர்ப்பை எதிர்நோக்கி ஒட்டுமொத்த நாடு காத்திருக்கிறது.
வினேஷ் போகத்திற்கு வெள்ளி உறுதி?
தகுதிநீக்கம் செய்யப்பட்டதும் வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக உருக்கமான அறிவிப்பை வெளியிட்டார், இது இன்னும் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள இயலாமல் சமூக வலைதளங்களில் தங்களின் ஆற்றாமையை பலரும் வெளிப்படுத்தியிருந்தனர். ஜோர்டான் பர்ரோஸ், நீரஜ் சோப்ரா, ரவிசந்திரன் அஸ்வின் உள்ளிட்ட பல சர்வதேச விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வினேஷ் போகத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். வினேஷ் போகத்திற்கு எப்படியாவது வெள்ளி வந்துவிட வேண்டும் என பலரும் தினமும் வேண்டி வருகின்றனர்.
இதுதான் காரணம்
இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (WFI) தலைவராக கடந்த டிசம்பர் மாதம் தேர்வான சஞ்சய் சிங் ஒலிம்பிக்கில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பதக்கம் வெல்லாதது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில்,"இங்கு வேறு கோணத்தில் பார்த்தோமானால், 14-15 மாதங்களாக நடந்த போராட்டங்களால், ஒட்டுமொத்த மல்யுத்தச் சமூகமும் தவித்தது. போராட்டத்தால் ஒரு எடைப் பிரிவை விட்டுவிட்டு, மற்றொரு பிரிவில் உள்ள மல்யுத்த வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகள் இல்லாமலும், பயிற்சி செய்ய முடியாமலும் தவித்தனர். எனவே, மல்யுத்த வீரர்களால் பாரிஸ் ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட முடியவில்லை" என்றார்.
மேலும் படிக்க | வினேஷ் போகத் கடந்து வந்த 'ஓராயிரம்' சோதனைகள்... இந்த கஷ்டம் யாருக்குமே வரக்கூடாது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ