ராமர் கோயில் கட்டுவதற்க்காக நீதிமன்றத்தின் முடிவுக்கு காத்திருக்க முடியாது: VHP

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு அவசர சட்டத்தை இயற்ற வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் கோரிக்கை வைத்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 2, 2019, 02:04 PM IST
ராமர் கோயில் கட்டுவதற்க்காக நீதிமன்றத்தின் முடிவுக்கு காத்திருக்க முடியாது: VHP title=

கடந்த 2010 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் "ராமஜென்ம பூமி" என கூறப்படும் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த வழக்கு, தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கு குறித்த தீர்ப்பு ஜனவரி 4 ஆம் தேதி வழங்க உள்ளது. 

இந்தநிலையில், புதுடெல்லியில் நேற்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, ராமர் கோவில் விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்பொழுது அவர், "அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தை பொறுத்தவரை, நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக காத்திருக்கிறோம். சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகே, ராமர் கோவிலுக்கு அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்யப்படும். இந்த விவகாரத்தில் நாங்கள் அவசரப்படவில்லை. சட்டத்துக்கு உட்பட்டே அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் எனக்கூறினார் பிரதமர்.

அயோத்தியில் ராமர் கோயில் விவகாரம் குறித்து பிரதமர் மோடியின் அறிக்கைக்கு பிறகு, இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அலோக் குமார், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஒரு அவசர சட்டத்தை இயற்ற வேண்டும். இந்து சமுதாயம் காலவரையற்ற நீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருக்க முடியாது. அயோத்தியில் உள்ள ராம் ஜான்மபூமி மீது ஸ்ரீராம் கோயில் கட்டுவதற்கு அனைத்து விதமான சட்டங்களை இயற்ற வேண்டும் என்று அலோக் குமார் கூறினார். 

"ராமர் கோயில் விவகாரம் குறித்து பிரதமர் மோடியின் கருத்தை நாங்கள் பார்த்தோம். இந்த விவகாரம் கடந்த 29 ஆண்டு காலமாக தொடர்கிறது. ராமர் கோயில் விவகாரத்தின் மேல்முறையீடு வழக்கு கடந்த 2011-ல் இருந்து உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.

இந்த வழக்கு குறித்து இறுதி தீர்ப்பு கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கும் என நினைத்தோம். ஆனால் அந்த சமயத்தில் வழக்கை நீதிபதி அமர்வு பெஞ்சுகள் விசாரிக்கவில்லை. மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

தற்போது விசாரணை ஜனவரி 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்பொழுதும் இறுதி தீர்ப்பு வருமா? என்பது கேள்விக்குறி. இன்னும் எத்தனை காலம் தான் வழக்கு நடைபெறும் என்று தெரியவில்லை. அதனால்தான், ஸ்ரீராம் பிறந்த இடத்தில் பெரிய ராமர் கோவில் கட்ட, மத்திய அரசு பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும் என நாங்கள் கூறுகிறோம்.

இதுக்குறித்து வரும் சனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆம் தேதி முடிவு செய்யப்படும் எனவும்  விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அலோக் குமார் கூறியுள்ளார்.

Trending News