மராட்டிய மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் மகாத்மா காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி பேசியதாக அவர் மீது பிவண்டி கோர்ட்டில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.இதை எதிர்த்து ராகுல் காந்தி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் கோர்ட்டு இதை ரத்து செய்தது. இதனால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தி சார்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் கூறியதாவது:- மகாத்மா காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என ராகுல் காந்தி ஒருபோதும் பேசவில்லை. அந்த அமைப்பை சேர்ந்த ஒருவருக்கு தான் இதில் தொடர்பு இருந்தது என பேசினார் என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எஸ்.நாரிமன் ஆகியோர் ராகுல் காந்தி கூறியதை எப்படி எடுத்துக்கொள்வது என்று எங்களுக்கு தெரியவில்லை. எனினும் ராகுல் காந்தியின் பதிலை ஏற்று வழக்கு தொடர்ந்தவர்கள் தங்கள் மனுவை முடித்து கொள்ள விரும்புகிறார்களா? என நீதிபதிகள் கேட்டனர். மேலும் இந்த வழக்கை வரும் செப்டம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், விசாரணைக்கு தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை ராகுல் திரும்ப பெற்றுக்கொண்டார். மேலும் அவர் கூறுகையில் தொடர்ந்து, எனது கருத்தில் நான் உறுதியாக உள்ளேன். இதிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கு இடமில்லை. மன்னிப்பு கேட்க மாட்டேன் இந்த வழக்கில் விசாரணைக்கு தயாராக உள்ளதாக கூறினார்.
இதனையடுத்து ராகுல் மீதான அவதூறு வழக்கு மீதான விசாரணை கீழ் கோர்ட்டில் நடைபெற உள்ளது.