மத்திய புலனாய்வு அமைப்பான CBI-யில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு பிரதமர் மோடியே காரணம் என குற்றம்சாட்டும் வகையில், ட்விட்டரில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.
CBI-யில், இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், இரண்டாம் இடத்தில் உள்ள சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தனாவுக்கும் இடையே கடும் அதிகார மோதல் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, CBI இயக்குனர் அலோக் குமார் வர்மாவும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை கூறி வந்த நிலையில் பண மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் மொயின் குரேஷி வழக்கை விசாரிக்கும் குழுவின் தலைவரான ராகேஷ் அஸ்தானா, 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக CBI வழக்குப்பதிவு செய்துள்ளது.
இடைத்தரகர் மனோஜ் குமார் என்பவர் அளித்த வாக்குமூலத்தின் மூலமே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் அல்லாமல், இந்த வழக்கில் இந்திய உளவுப் பிரிவான ரா அமைப்பின் சமந் குமார் கோயலின் (Samant Kumar Goel) பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மத்திய புலனாய்வு அமைப்பான CBI-யில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு பிரதமர் மோடியே காரணம் என குற்றம்சாட்டும் வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளதாவது, பிரதமருக்கு பிரியமானவரும், கோத்ரா விசாரணை புகழ் குஜராத் ஐபிஎஸ் அதிகாரியும், CBI-க்குள் இரண்டாம் நிலை பொறுப்புக்கு ஊடுருவியவருமான அதிகாரி, தற்போது லஞ்சம் பெற்றதாக பிடிபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் கீழ், அரசியல் பழிவாங்கலுக்கான கருவியாக CBI மாற்றப்பட்டிருப்பதாகவும், நசிவின் விளிம்பில் உள்ள CBI அமைப்பு, உட்பூசலில் ஈடுபட்டிருப்பதாகவும் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.