புது டெல்லி: அங்கீகாரம் பெற்ற தனியார் ஆய்வகங்கள் விரைவில் கொரோனா வைரஸ் பரிசோதனை வசதிகளைத் தொடங்க அனுமதிக்கப்படலாம், ஆனால் அவை நோயாளிகளுக்கு இலவசமாக சேவையை வழங்குமாறு வேண்டுகோள் வைக்கப்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) உயர் அதிகாரி இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார்.
முதலில் ஸ்கிரீனிங் சோதனைக்கு சுமார் 1,500 ரூபாய் செலவாகும். அதன் பிறகு நோய் உறுதிப்படுத்தும் சோதனைகளுக்கு ரூ .3,000 செலவாகும். ஆனால் அரசாங்கம் இந்த சோதனைகளுக்கு நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கவில்லை. மேலும் தனியார் ஆய்வகங்களும் கட்டணம் வசூலிக்காமல் அதிக நோய்த்தொற்றுக்கு உள்ளவர்களை சோதிக்க வேண்டும் என விரும்புகிறோம் என்றார்.
"இது அவர்களுக்கு எங்கள் வேண்டுகோள்" என்று ஐசிஎம்ஆர் இயக்குநர் ஜெனரல் பால்ராம் பார்கவா செவ்வாயன்று கூறினார். மேலும் சில தனியார் ஆய்வகங்கள் பரிசோதனையை இலவசமாக நடத்த முன்வந்தன. ஆனால் இது அனைவருக்கும் இலவசமாக இருக்காது.
தனியார் ஆய்வகங்களுக்கான ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்களின்படி, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தனியார் துறையால் சோதனைகளை நடத்த முடியாது, அவர்கள் அரசாங்க வழிகாட்டுதல்களின்படி தான் சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
இதற்காக மருத்துவமனைகள் மற்றும் சுகாதார தேசிய அங்கீகார வாரியத்துடன் (NABH) அங்கீகாரம் பெற்ற சுமார் 60 தனியார் ஆய்வகங்களுடன் ஆராய்ச்சி அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.