புதுடில்லி: தேர்தலில் தோல்வி அடைந்தது காங்கிரஸ் கட்சியின் தோல்வி தான் அன்றி இந்தியாவின் தோல்வியோ, இழப்போ அல்ல. ஆனால் அவர்களால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து மாநிலங்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அதிக மக்கள் ஆதரவுடன், அதிக நம்பிக்கையுடன் நாட்டுக்கு சேவை செய்ய மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். இந்த தேர்தல்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. பல தசாப்தங்களுக்குப் பிறகு, அரசாங்கம் முழு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துள்ளது. நாட்டு மக்கள் ஜனநாயகத்தை வலியுறுத்தியுள்ளனர்.
2019 மக்களவை தேர்தலில் நாட்டு மக்கள்தான் போட்டியிட்டார்கள். அவர்கள் தான் தங்களுக்கு எந்த அரசாங்கம் வேண்டும் என முடிவு செய்தனர். மக்களே அரசாங்கத்தின் பணிகள் குறித்து அனைவரிடத்திலும் எடுத்துச் சென்றனர். இது இந்தியா ஜனநாயகத்தின் மிகப்பெரிய வளர்ச்சி. உலகளாவிய இந்தியாவின் மதிப்பு கூடியுள்ளது எனக்கூறினார்.
இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியை குறிவைத்து பேசிய பிரதமர் மோடி, எங்களை பார்த்து, "நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். ஆனால் மக்கள் தோற்றுள்ளனர். நாடு தோற்றது என காங்கிரஸ் கூறுகிறது. இது நாட்டு மக்களுக்கு எவ்வளவு பெரிய அவமானமாக இருக்கும். மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு ஆட்சியை இப்படி சொல்லலாமா? இது தீவிரமாக சிந்திக்க வேண்டிய விஷயம்.
ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டுள்ளது எனக்கூறும் காங்கிரஸ், வயநாடு, அமேதி, ரே பரேலி மற்றும் திருவனந்தபுரத்திலும் ஜனநாயகம் தோற்றுள்ளதா? என்று கேட்க விரும்புகிறேன். காங்கிரஸ் தோற்றால் நாடு தோற்றதா? ஈகோவுக்கு ஒரு எல்லை உண்டு.
17 மாநிலங்களில் ஒரு இடத்தை கூட காங்கிரஸால் வெல்ல முடியவில்லை. இப்படியெல்லாம் காங்கிரஸ் பேசி வாக்காளர்களின் மனதை புண்படுத்தக் கூடாது. விமர்சனங்கள் மதிக்கப்படுகிறது. ஆனால் நாட்டின் வாக்காளர்களை அவமதிப்பதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்தத் தேர்தலில் வாக்களிக்க 80 வயதான முதியவர்கள் கூட 40-45 டிகிரியில் வெயிலை பொருட்படுத்தாமல் வாக்களிக்கச் சென்றனர்.
காங்கிரஸ் விவசாயிகளை அவமதித்தார்கள். ஊடகங்கள் விற்கப்பட்டன எனக்கூறி ஊடகத்தை அவமதித்தார்கள். ஆனால் நான் கேட்கிறேன்.. கேரளாவில் ஊடகங்கள் விற்கப்பட்டனவா? இந்தியா ஜனநாயகம் குறித்து பெருமைப்பட வேண்டும். நான் தலை குனிந்து இந்திய வாக்காளர்களை வாழ்த்துகிறேன்.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை குறை சொல்வதும், அதன் மீது பழி போடுவதும் தற்போதைய ட்ரண்ட் ஆகி விட்டது. மின்னணு ஓட்டு இயந்திரங்களை பற்றி சந்தேகம் எழுப்புவது என்பது எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு நோய்.
ஈ.வி.எம் பற்றிய விவாதம் 1977 இல் தொடங்கியது, முதலில் 1982 இல் பயன்படுத்தப்பட்டது என்று பிரதமர் மோடி கூறினார். 1988 ஆம் ஆண்டில், அதற்கு சட்ட அனுமதி வழங்கப்பட்டது 1992 இல் காங்கிரஸ் தலைவர்கள் தான் மின்னணு ஓட்டு இயந்திரங்களுக்கான விதிகளை உருவாக்கினர். இன்று காங்கிரஸ் வெற்றியை இழந்திருப்பதால் ஈ.வி.எம் இயந்திரத்தை குறை கூறுகிறார்கள்.
ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது என்ற தேர்தல் கமிஷனின் சவாலை ஏற்க மறுக்கிறது காங்கிரஸ். தேர்தல் செயல்முறை கணிசமாக முன்னேறியுள்ளது. மேம்பாடுகள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. முதலில் தேர்தல் நடக்கும் போது ஒரு தலைப்பு இருந்தது, தேர்தலின் போது எவ்வளவு வன்முறை நடந்தது என்று, ஆனால் இன்றைய தலைப்பு என்னவென்றால், முந்தையதை தேர்தலை விட இந்த தேர்தலில் எவ்வளவு வாக்களிக்கப்பட்டு என்ற ஒப்பிடும் தான் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் தங்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும். 2014 ஆம் ஆண்டு முதல் எங்கள் வெற்றியும் அவர்களின் தோல்வியையும் காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை.
தேர்தல் சீர்திருத்தம் கட்டாயமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பது பற்றி விவாதிக்க ஏன் எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. தனித்தனியாக நடத்தப்படும் தேர்தலால் செலவு அதிகரிக்கிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டதால் செலவு குறைந்துள்ளதற்கு ஒடிசா ஒரு சிறந்த உதாரணம். ஒடிசாவின் வாக்காளர்கள் மக்களவைக்கு தனியாகவும், சட்டசபைக்கு தனியாகவும் வாக்களித்தனர். ஆனால் ஒரே தேசம், ஒரே தேர்தல் நிறைவேற்றிவிட்டால், மாநில கட்சிகள் அழிந்துவிடும் என்ற மாயை பரப்புகிறார்கள். இது தவறு, ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. ஆனால் அங்கு வென்றவர்கள் மாநில கட்சி தான்.
எதிர்க்கட்சிகள் அனைத்து மசோதாக்களை எதிர்ப்பது தான் வேலையே. நம் நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இருக்கக் கூடாது, ஆதார் சட்டம் கொண்டு வந்தால் தவறு, ஜிஎஸ்டி, ஈவிஎம், யோஜனா போன்ற திட்டங்கள் கொண்டு வந்தால் எதிர்க்கப்படுகின்றன. மாநிலங்களவையில் என்ன நடக்கிறது என்பதை வாக்காளர்கள் கவனிக்கிறார்கள். அதனால் தான் மக்கள் அவர்களுக்கு தண்டனை வழங்கியுள்ளனர். மக்கள் புதிய இந்தியாவிற்காக ஓட்டளித்துள்ளனர்.
நாங்கள் ஒரு முடிவு எடுக்கிறோம் என்றால், அதை பூர்த்தி செய்ய முயற்சி செய்யுங்கள். மசோதாக்களின் கழுத்தை நெரிக்க முயற்சிக்காதீர்கள். மக்களவையில் ஒரு மசோதா நிரைவேற்றப்பட்டால், அது மாநிலங்களவையிலும் மதிக்கப்பட வேண்டும். உங்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.
ஜார்க்கண்டில் ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேசிய அவர், இதுபோன்ற சம்பவங்கள் வேதனையை அளிக்கிறது. குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். ஆனால் இதற்காக ஒட்டுமொத்த ஜார்க்கண்ட் மாநிலத்தை குறைசொல்வது தவறு. இது குற்றத்திற்க்கு காரணமானவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.