விவசாயிகள், மகளிர், தொழிலாளர்களின் வளர்ச்சிக்கு அரசு பாடுபடும்!

மக்களவையில் முதல்முறையாக அதிக மகளிர் இடம்பெற்றிருப்பது பெருமையானது என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம்!!

Last Updated : Jun 20, 2019, 11:43 AM IST
விவசாயிகள், மகளிர், தொழிலாளர்களின் வளர்ச்சிக்கு அரசு பாடுபடும்! title=

மக்களவையில் முதல்முறையாக அதிக மகளிர் இடம்பெற்றிருப்பது பெருமையானது என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம்!!

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார். இரண்டாவது முறையாக பதவியேற்ற மோடி அரசின் திட்டங்கள் குறித்து இந்த உரையில் முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் தனது உரையை துவக்கிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறுகையில், மக்களவையில் முதல்முறையாக அதிக மகளிர் இடம்பெற்றிருப்பது பெருமையானது. விவசாயிகள், மகளிர், தொழிலாளர்களின் வளர்ச்சிக்காக அரசு முழுமையாக பாடுபடும் எனவும் அவர் தெரிவித்தார். 

நாட்டில் வாக்களிக்க முன்வந்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முதல் தலைமுறை வாக்காளர்களும் அதிக அளவில் வாக்களிக்க முன்வந்திருந்தனர். தேர்தலை வெற்றிகரமாக நடத்திய தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுகள். தற்போது பதவி ஏற்றுள்ள மக்களவையின் பாதி எம்பிக்கள் புதுமுகங்கள். புதிதாக தேர்வாகி வந்துள்ள எம்பிக்கள் மக்கள் பணியை திறம்பட ஆற்ற வேண்டும். 

பல்வேறு துறைகளின் நிபுணர்கள் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாகியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஒரு தெளிவான முடிவை கொடுத்துள்ளனர். தேசத்தை முன்னோக்கி அழைத்துச் செல்ல அனைத்து எம்பிக்களும் பணியாற்ற வேண்டும். மக்களின் வாழ்வை சிறப்பாக்குவது தான் மத்திய அரசின் முக்கியமான நோக்கம். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் நலனும் மத்திய அரசுக்கு முக்கியம். 

மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்வதே அரசின் திட்டம். புதிய இந்தியாவை நோக்கி மக்களை அழைத்துச் செல்வதே மத்திய அரசின் பிரதான இலக்கு. கடந்த ஐந்து ஆண்டுகால அரசு தங்களுக்கானது என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தேச வளர்ச்சியின் பலன் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைக்க வேண்டும். பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதும் அரசின் மிக முக்கிய தீர்மானம்.  சுமார் 13 ஆயிரம் கோடி மதிப்பில் விவசாயிகளுக்கான நலத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. சிறு, குறு வியாபாரிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க அரசு திட்டத்தை செயல்படுத்துகிறது. 

மேலும், குடிநீர் பிரச்சனை என்பது நாட்டு மக்களின் முன் தற்போது மிகப்பெரிய சவாலாக உள்ளது. துணை ராணுவப்படையினருக்கு பலன் அடையும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. எதிர்கால சந்ததியினருக்காக நாம் தண்ணீரை சேமிக்க வேண்டியது அவசியம். வறட்சி பாதித்த கிராமங்களில் நிவாரணப்பணிகள் முழு வீச்சில் நடத்தப்படும். தண்ணீர் பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்பதற்கு தான் ஜல்சக்தி என்ற பெயரில் புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. ஊரகப்பகுதிகளில் உள்ள மக்களும் தங்கள் வாழ்வை வளமாக்கும் வகையிலான அதிகாரங்களை பெற வேண்டும். 

வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும். வேளாண்துறையை மேம்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும். தண்ணீர் சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மை மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமாக இருக்கும். விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீட்ட பிரதமரின் காப்பீடு திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். 

இதை தொடர்ந்து, விவசாயத்துறையில் சவால்களை களைய, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்த பிரத்யேக குழு அமைக்கப்படும். ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெண்கள் முன்னேற்றம் அடைய கடந்த 5 ஆண்டுகளாக திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டன. 
கால்நடைத் துறையை மேம்படுத்த சிறப்பு திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது. மீன்கள் வளர்ப்பில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வங்கிகள் அனைவருக்குமானது என்பதை கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு நிரூபித்துக் காட்டியுள்ளது. உயர்தர மருத்துவ சேவைகளை தற்போது ஏழை எளிய மக்களும் பெற முடிகிறது. 

சுமார் 26 லட்சம் ஏழை எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை மத்திய அரசின் புதிய திட்டத்தின் மூலம்வழங்கப்பட்டுள்ளது. 1.5 லட்சம் சுகாதார மையங்கள் நாடு முழுவதும் புதிதாக அமைக்கப்படும். பழங்குடியினர் முன்னேற்றத்தை உறுதி செய்யவும் மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. பெண்கள் சுய அதிகாரத்துடன் செயல்பட தேவையான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. கிராமப்புற பெண்களின் நலன், பொருளாதாரம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த முன்னுரிமை, பெண் குழந்தைகளை பேணும் மத்திய அரசின் திட்டத்தால் நாட்டில் பாலின விகிதம் மேம்பட்டுள்ளது. 

பெண் குழந்தைகளை படிக்க வைக்கும் மத்திய அரசின் திட்டத்தால் நாட்டில் பாலின விகிதம் மேம்பட்டுள்ளது. முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யும் முறை நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டும். இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவது இளைஞர்கள் தான் என்பதை மத்திய அரசு உணர்ந்துள்ளது. இளைஞர்களுக்கு அதிகாரம் வழங்கும் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க முன்னுரிமை அளிக்கப்படும். இளைஞர்கள் தரமான கல்வியை பெற மத்திய அரசு கூடுதல் நிதி உதவி அளிக்கும். 

வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளை இளைஞர்கள் பெற திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்படும். புதிய நிறுவனங்கள் மற்றும் தொழில்களுக்கே உலகத்திற்கே இந்தியா முன் உதாரணமாக விளங்குகிறது. முன்னணி கல்வி நிறுவனங்களின் உயர் கல்வி படிப்புகளுக்கான இடங்கள் அதிகரிக்கப்படும். கல்வித்துறையில் அடிப்படை கட்டமைப்புகளை நவீனமாக்க முன்னுரிமை, விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். தொலைதூர கிராமங்களில் சுமார் 3 கோடி கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். 

மத்திய அரசின் மேன் இன் இந்தியா திட்டம் ஏற்கனவே மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. 2022க்குள் இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக்குவது தான் மிக முக்கிய இலக்கு. இந்தியாவில் தொழில் தொடங்குவது, தொழில் செய்வது மிகவும் எளிமையாகியுள்ளது. அனைத்து துறைகளிலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா உலகின் 5வது சிறந்த நாடாக உள்ளது. சிறிய தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி உதவிகரமாக அமைந்துள்ளது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்துவதில் அரசு முனைப்போடு செயல்படும். 

ஜூலை 5 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், குடியரசுத் தலைவரின் உரை அதன் முக்கிய அம்சங்களை கோடிட்டு காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முத்தலாக் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் இந்த வாரம் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளன.

Trending News