உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதைத்தொடர்ந்து, நாட்டில் நிலவும் சூழல் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, இன்று பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி, கள்ள நோட்டுகளை ஒழிக்கவும் மற்றும் கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது அறிவித்தார்.
இந்நிலையில், ரூபாய் நோட்டு விவகாரத்தால் நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
டெல்லியில் உள்ள நீதி ஆயோக் அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், பொருளாதார வல்லுநர்கள் பங்கேற்கின்றனர். ரூபாய் நோட்டு விவகாரத்தால், அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலையிழந்ததாக கூறப்படுவது குறித்தும், மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிப்பது குறித்தும் பிரதமர் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக குறையும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில், பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளது என்று கருதப்படுகிறது.