சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்க காங்கிரஸ் விரும்புகிறதா? சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மோடி

PM Modi On Bihar Caste Census: என்னைப் பொறுத்தவரை ஏழைகள் தான் பெரிய சாதி, அது தலித்தாக இருந்தாலும் சரி, பிற்படுத்தப்பட்டவனாக இருந்தாலும் சரி, ஏழைகளுக்கு நல்லது நடந்தால், அது நாட்டுக்கு நல்லது - பிரதமர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 3, 2023, 06:11 PM IST
  • பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பதிலடி.
  • சிறுபான்மையினரின் உரிமையை நீக்க காங்கிரஸ் விரும்புகிறதா? மோடி கேள்வி
  • மக்கள் தொகைக்கு ஏற்ப உரிமை வழங்க வேண்டும் என்றால் யாருக்கு முதல் உரிமை? மோடி கேள்வி
சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்க காங்கிரஸ் விரும்புகிறதா? சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மோடி title=

PM Modi Rally in Chhattisgarh: சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அதற்கு முன்பே தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இன்று (செவ்வாய்க் கிழமை) பஸ்தாரின் ஜக்தல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்தார். பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் முழக்கத்திற்கும் அவர் பதிலடி கொடுத்துள்ளார். 

நேற்றிலிருந்து காங்கிரஸ் வித்தியாசமான முழக்கத்தை எழுப்ப ஆரம்பித்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். அதாவது சாதிவாரி கணக்கெடுப்பின் படி, எந்த சமூகத்தினர் அதிகமாக இருக்கிறார்களோ, அந்த சமூகத்திற்கு உரிமைகள் அதிகம் என்று கூறுகிறார்கள். இந்த நாட்டில் அதிக மக்கள் தொகை எதுவென்றால், அது ஏழைகள் தான் என்று நான் சொல்லுவேன். எனவே, ஏழைகளின் நலனே எனது நோக்கம் என யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக பிரதமர் மோடி பேசினார்.

ஏழைகள் தான் பெரிய சாதி - பிரதமர் மோடி

தேர்தல் பொதுக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய மோடி, மக்கள் தொகைக்கு ஏற்ப சமபங்கு பற்றி காங்கிரஸ் பேசுகிறது என்றால், இந்துக்களை பிரித்து நாட்டை பிரிக்க காங்கிரஸ் நினைக்கிறது என்றார். என்னைப் பொறுத்தவரை ஏழைகள் தான் பெரிய சாதி, ஏழைகளின் நலனில் எனது அரசு ஈடுபட்டு உள்ளது. ஏழை தலித்தாக இருந்தாலும் சரி, பிற்படுத்தப்பட்டவனாக இருந்தாலும் சரி, ஏழைகளுக்கு நல்லது நடந்தால், அது நாட்டுக்கு நல்லது என்றார்.

மேலும் படிக்க - Caste Census | மண்டல் 2.0: மாற்றம் வருமா? பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு! அஞ்சும் பாஜக!

'அப்படியானால் இந்துக்களுக்கு தான் உரிமை உண்டா? பிரதமர் மோடி கேள்வி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் என்ன நினைத்திருப்பார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன் என்றார் பிரதமர். நாட்டின் வளங்களில் சிறுபான்மையினருக்கே முதல் உரிமை உண்டு என்று மன்மோகன் சிங் கூறி வந்தார். அதிலும் ஒரு முஸ்லிமுக்கே முதல் உரிமை என்றார். ஆனால், தற்போது நாட்டில் யாருக்கு முதல் உரிமை என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று காங்கிரஸ் கூறுகிறதா? இப்போது அவர்கள் (காங்கிரஸ்) சிறுபான்மையினரின் உரிமைகளைக் குறைக்க விரும்புகிறதா? மக்கள் தொகைக்கு ஏற்ப உரிமை வழங்க வேண்டும் என்றால் யாருக்கு முதல் உரிமை? தயவு செய்து காங்கிரஸ் கட்சியினர் தெளிவுபடுத்துங்கள். சிறுபான்மையினரின் உரிமையை நீக்க காங்கிரஸ் விரும்புகிறதா? அப்படியானால், இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட இந்துக்கள் முன் வார வேண்டுமா? மற்றும் அவர்களுக்கு தான் அனைத்து உரிமையும் கிடைக்குமா? என அடுக்கடுக்காய் கேள்விகளை மக்கள் முன் வைத்தார்.

காங்கிரசை வழிநடத்தும் தேச விரோத சக்திகள் -பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சியை இனி காங்கிரசாரால் நடத்த மாட்டார்கள் என்பதை நான் மீண்டும் சொல்கிறேன். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வாயை மூடிக்கொண்டு அமர்ந்துள்ளனர். அவர்கள் கேட்டதும் இல்லை, இதையெல்லாம் பார்த்துவிட்டு பேசத் துணிவதும் இல்லை. இப்போது காங்கிரஸ் அவுட்சோர்சிங் செய்யப்பட்டு உள்ளது. அதாவது தேச விரோத சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ள சிலரால் காங்கிரஸ் கட்சி வழிநடத்தப்படுகிறது என்றார் பிரதமர்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு - ராகுல் காந்தி கருத்து

பீகார் மாநில சாதிவாரி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் வெளியானதை அடுத்து, அதுக்குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, "பிகாரில் OBC + SC + ST சேர்த்து 84% என்று சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு காட்டுகிறது. மத்திய அரசின் 90 செயலாளர்களில், 3 பேர் மட்டுமே OBC வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இந்தியாவின் பட்ஜெட்டில் 5% மட்டுமே கையாளுகின்றனர். எனவே, இந்தியாவின் சாதிப் புள்ளி விவரங்களை அறிந்து கொள்வது அவசியம். அதிக மக்கள் தொகை, அதிக உரிமைகள், இது எங்கள் உறுதிமொழி என்று எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டிருந்தார்.

காங்கிரஸ் பொய்யை மட்டும் தான் பரப்புகிறார்கள் - பிரதமர் மோடி

கஜானாவில் இருந்து காங்கிரசார் சாப்பிட்டு வந்த பொருட்களை இந்த மோடி பூட்டி வைத்துள்ளேன். அதனால் அவர்கள் குழப்பமடைந்து உள்ளனர். அதற்காக போராடி வருகின்றனர். இன்றும் அவர்கள் பொய்யை மட்டும் தான் பரப்புகிறார்கள். ஆனால் நீங்கள் இங்கு இவ்வளவு கூட்டமாக வந்து அவர்களின் பொய் பிரச்சாரத்தை ஓங்கி அறைந்துள்ளீர்கள் என்றார்.

மேலும் படிக்க - AIADMK Vs BJP: டெல்லியில் அண்ணாமலை.. அமைதியாக இருங்கள்.. எச்சரித்த மேலிடம்!

பழங்குடியினருக்காக ஐந்து மடங்கு பட்ஜெட்

சத்தீஸ்கரில் சுமார் 27,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் இன்று வெளியிட்டார் மற்றும் பரிவர்தன் சங்கல்ப் பேரணியில் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, பல ஆண்டுகளாக பஸ்தாரை காங்கிரஸ் புறக்கணித்து வருகிறது. மக்களின் நலன் பற்றி அவர் சிந்தித்ததில்லை. இங்கு பாஜக பல வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளது. இங்குள்ள பழங்குடியினருக்காக காங்கிரசை விட பாஜக ஐந்து மடங்கு அதிக பட்ஜெட் வழங்கும்.

பிரதமர் மேலும் கூறுகையில், பிர்சா முண்டா பிரபுவின் பிறந்த நாளான நவம்பர் 15 ஆம் தேதியை பழங்குடியினர் தினமாக பாஜக அரசே அறிவித்தது. பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையையும் இரு மடங்காக உயர்த்தி உள்ளோம். 

சத்தீஸ்கர் - ராஜஸ்தான் இடையே கடும் போட்டி

கடந்த 5 ஆண்டுகளில் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஏற்படுத்திய நிலையை நாடு முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறது என்றார். எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களின் செயல்களால் அனைவரும் கலக்கமடைந்து உள்ளனர். சத்தீஸ்கரில் குற்றங்கள் உச்சத்தில் இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சரியில்லை. சில சமயங்களில் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் இடையே, "எங்கு அதிக கொலைகள் நடக்கின்றன, எங்கே அதிக கொள்ளைகள் நடக்கின்றன, எங்கு அதிக பெண்கள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள்" என்று போட்டி நடப்பதாக தெரிகிறது எனக் காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.

மேலும் படிக்க - பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? எடப்பாடி பழனிச்சாமி பகீர் குற்றச்சாட்டு!

ஊழல்வாதிகள் மோடியை கண்ணால் பார்க்க முடியாது

இன்று நாட்டின் மிகப் பெரிய மற்றும் நவீன எஃகு தொழிற்சாலை இங்கு திறக்கப்பட்டு உள்ளது. இவ்வளவு பெரிய நிகழ்ச்சி இப்போது தான் நடந்திருக்கிறது. ஆனால் சத்தீஸ்கர் காங்கிரஸின் முதல்வரும், துணை முதல்வரும் வரவில்லை. இந்த நிகழ்ச்சியில் ஒரு காங்கிரஸ் அமைச்சர் கூட கலந்து கொள்ளவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, மாநிலத்தில் அவர்களின் அரசாங்கம் வீழ்ச்சி அடைந்து வருவதைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறார் மற்றும் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதில் மும்முரமாக இருக்கிறார். இரண்டாவதாக, இதுதான் மோடி, எந்த ஊழல்வாதியும் மோடியை கண்ணால் பார்க்க முடியாது, அதனால் அவர்கள் வர பயந்து ஓடிவிடுகிறார்கள் என்றார்.

மோடியின் தாக்குதலுக்கு சத்தீஸ்கர் முதல்வர் பதிலடி

இந்நிலையில், பிரதமர் மோடியின் தாக்குதலுக்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் தனது X தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது பதிவில், பஸ்தார் எஃகு ஆலை இங்குள்ள பழங்குடியினர் மக்களுக்கு சொந்தமானது என்று பிரதமர் கூறியுள்ளார். ஆனால் அது தனியார் மயமாக்கப்பட மாட்டாது என்று அவர் இதுவரை கூறவில்லை. எஃகு ஆலை விற்க நினைத்தால் அதை காங்கிரஸ் எதிர்க்கும். அது பஸ்தர் மக்களுக்குச் சொந்தமானது என்றால் அது பஸ்தர் மக்களிடம் மட்டுமே இருக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

 

பீகார் மாநில சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள்

பீகார் அரசின் தரவுகளின்படி, மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 13.07 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இதில் மிகவும் பின்தங்கிய வகுப்பினர் (36 சதவீதம்) அதிகமாக உள்ளனர். அதன்பிறகு, இதர பிற்படுத்தப்பட்டோர் 27.13 சதவீதம். பட்டியல் சமூகத்தினர் 19.65 சதவீதம், பட்டியல் பழங்குடி சமூகத்தினர் 1.68 சதவீதம் மற்றும் உயர் சாதியினர் 15.52 சதவீதம் உள்ளனர். மேலும், ஓபிசி சமூகத்தில் யாதவ் தான் பெரிய சாதி என்றும் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. மாநிலத்தில் 14.27 சதவீதம் யாதவர்கள் உள்ளனர். பீகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 63.1 சதவீதத்தினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகும். மேலும் மாநிலத்தில் இந்துக்களின் மக்கள் தொகை 81.99 சதவீதம் மற்றும் முஸ்லிம் மக்கள் தொகை 17.70 சதவீதம் உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல்: சூடு புடிக்கும் அரசியல் களம்

பீகார் மாநில சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை வந்த பிறகு அரசியலும் சூடுபிடித்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் இட ஒதுக்கீடு விவகாரம் பெரிய புயலைக் கிளப்ப உள்ளது. சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்ட முதல் மாநிலம் என்ற பெருமையை பீகார் பெற்றுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை மண்டல் அறிக்கை 2.0 என்று அழைக்கப்படுகிறது. 

மேலும் படிக்க - பீகார் சாதிவாரி மக்கள் தொகை... வெளியான முடிவுகள் - ஓபிசி, எஸ்சி, எஸ்டி மக்கள் எத்தனை சதவீதம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News