மோடியின் தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்தல் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது!
மகாராஷ்டிர மாநிலம், வார்தாவில் பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன் தனது தேர்தல் பிரச்சாரத்திர் ஈடுப்பட்டார். அப்போது அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது, "கட்சித் தலைவர்கள் சிலர் தேர்தலில், ஹிந்துக்கள் அதிகமுள்ள தொகுதிகளில் போட்டியிட பயந்துக் கொண்டு, ஹிந்து சமூகத்தினர் குறைவாக உள்ள இடங்களுக்குச் சென்று போட்டியிடுகின்றனர்" என்று பேசினார்.
பிரதமர் மோடியின் இந்த கருத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம், வயநாட்டில் போட்டியிட்டுள்ளதை மறைமுகமாக சுட்டி காட்டுவதாக தெரிந்தது.
இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு வெறுப்புணர்வு மற்றும் பிரிவினையை தூண்டும் விதத்தில் உள்ளதென, காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் பேசியதில், தேர்தல் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என தெரிவித்துள்ளது.
மேலும் மகாராஷ்டிர மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அளித்துள்ள அறிக்கை மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளை ஆராய்ந்த பின்பே, ஆணையம் இந்த முடிவுக்கு வந்துள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளது.
Election Commission: In matter related to a complaint concerning alleged violation of Model Code of Conduct in a speech by PM Narendra Modi in Wardha, Maharashtra on 01.04.2019, Commission is of the considered view that in this matter no such violation has been noticed. pic.twitter.com/oCNjMkpWSO
— ANI (@ANI) April 30, 2019
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா தேர்தல் விதிகளை மீறி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் என காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. சுஷ்மிதா தேவ் உச்ச நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறப்படும் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.