பீஸ் டிவி ஒளிபரப்பு சட்டவிரோதமானது- வெங்கையா நாயுடு

Last Updated : Jul 11, 2016, 06:53 PM IST
பீஸ் டிவி ஒளிபரப்பு சட்டவிரோதமானது- வெங்கையா நாயுடு title=

’பீஸ்’ டிவி அமைதியை பாதிக்கிறது என்றும் இந்தியாவில் சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்றும் மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி வெங்கையா நாயுடு கூறிஉள்ளார். டாக்காவில் 22 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் பயங்கரவாத தாக்குதலுக்கு தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஜாகிர் நாயக்கின் போதனைகளை ஒளிபரப்பு செய்துவரும் ’பீஸ்’ டிவியை வங்காளதேசம் தடை செய்தது. இதியாவில் ஒளிபரப்பு செய்ய உரிமை வழங்கப்படவில்லை, ஆனால் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

ஜாகிர் நாயக்கின் பேச்சுக்கள் மற்றும் பிற விபரங்கள் தொடர்பாக மத்திய அரசு விசாரித்து வருகிறது. ஜாகிர் நாயக் இன்று சவுதியில் இருந்து இந்தியா திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டது, ஆனால் திரும்பவில்லை.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கையா நாயுடு:-  “பீஸ் டிவி அமைதியை பாதிக்கிறது. இந்தியாவில் சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பிறநாடுகளும் டிவிக்கு தடை விதித்து உள்ளது. டிவி கடந்த 2008-ம் ஆண்டு லைசன்ஸ் கோரி விண்ணப்பம் செய்தது, ஆனால் அரசால் நிராகரிக்கப்பட்டது. எனவே பீஸ் டிவி ஒளிபரப்பு சட்டவிரோதமானது.” மக்கள் அதிகாரப்பூர்வமற்ற சேனல்களை பார்க்க நேரிட்டால் தகவல் தொடர்பு அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்கவேண்டும். அதிகாரப்பூர்வமற்ற டிவிக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனைத்து முதல்-மந்திரிகள் மற்றும் மாநிலங்களுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. 

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்து உள்ள நிகழ்வு தொடர்பான ஜிஎன் ஆசாத் மற்றும் சல்மான் குர்ஷித் கருத்துக்களை வரவேற்கிறோம் என்று கூறினார். 

Trending News