அமேதி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியின் வேட்புமனு ஏற்பு!!
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்நிலையில், சமீபத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி அமேதியில் வேட்பு மனுக்கள் செய்தார்.
அமேதி தொகுதியில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நடைபெற்றது. அப்போது ராகுல் காந்தி வேட்பு மனுவோடு தாக்கல் செய்த பிரமாண பத்திரம் மீது சுயேச்சை வேட்பாளர் துருவலால் மனோகர், அப்சல் வாரிஸ், சுரேஷ் சந்திரா, சுரேஷ் குமார் ஆகியோர் பிரச்சினை எழுப்பினர்.
குறிப்பாக அவர்கள் ராகுல் காந்தியின் பெயர், தேசியத்துவம் (இந்தியரா?), கல்வி ஆகிய 3 அம்சங்களில் பிரச்சினை எழுப்பினர். ராகுல் காந்தியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதில் பதில் அளிக்க அவகாசம் தர வேண்டும் என்று ராகுல் காந்தியின் வக்கீல் ராகுல் கவுசிக் கேட்டுக்கொண்டார். இதையடுத்து இந்த விவகாரத்தில் 22 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு விசாரணை நடத்தப்படும் என தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான டாக்டர் ராம் மனோகர் மிஷ்ரா அறிவித்தார்.
Amethi returning officer declares Congress President Rahul Gandhi's nomination valid. #LokSabhaElections2019 pic.twitter.com/Io0WZYQoLX
— ANI UP (@ANINewsUP) April 22, 2019
மேலும் இந்தப் பிரச்சினையால் அமேதி தொகுதியில் போட்டியிடுகிற 36 வேட்பாளர்களின் வேட்பு மனு பரிசீலனையையும் அவர் 22-ந் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்தார். தள்ளிவைக்கப்பட்ட வேட்பு மனு மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. இதில், ராகுல் காந்தியின் வேட்பு மனுவை ஏற்பதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.