உத்தவ் தாக்கரே பதவியேற்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக, NCP தலைவர் அஜித் பவார் தான் இன்று சத்தியப்பிரமாணம் எடுக்கவில்லை எனவும், தான் கோபத்தில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சித் தலைவர் ஷரத் பவார் என்ன செய்யச் சொன்னாலும் அதைச் செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். ஜீ நியூஸுடன் பேசிய அவர் தெரிவிக்கையில்., "நான் கோபப்படவில்லை, நான் NCP-யில் மிகவும் நிம்மதியாக இருக்கிறேன், இப்போது என் சகோதரியுடன் (சுப்ரியா சூலே) சத்தியப்பிரமாண விழாவில் பங்கேற்க செல்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு கட்சியிலிருந்தும் (சிவசேனா, NCP, காங்கிரஸ்) ஆறு தலைவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்கள் என்றும், துணை முதல்வர் குறித்த முடிவு இன்னும் கட்சியால் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருப்பீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டபோது, "இது குறித்து முடிவெடுக்க எனக்கு அதிகாரம் இல்லை, கட்சி தீர்மானிக்கும், பிறகு நான் உங்களுக்கு தெரிவிப்பேன். இதுவரை இதுபோன்ற முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை" என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "நான் சிரித்தால், நான் சிரிக்கிறேன் என்று மக்கள் கூறுகிறார்கள், நான் அமைதியாக இருந்தால், நான் அமைதியாக இருக்கிறேன் என்று அவர்கள் கூறுகிறார்கள். அப்படியென்றால் நான் என்ன தான் செய்ய வேண்டும்? கட்சியின் தலைவர் என்ன முடிவு எடுக்கின்றாரோ அதன்படி முன்னேறுவேன்." என குறிப்பிட்டுள்ளார்.
காலை முதல், இன்று துணை முதல்வராக பதவயேற்காத அஜித் பவார் மகிழ்ச்சியாக இல்லை என்று யூகங்கள் இருந்தன. இந்த யூகங்களுக்கு இடையில் சரத் பவாரைச் சந்திக்கச் அஜித் பவார் சென்றார், பின்னர் அவர் இன்று சத்தியப்பிரமாணம் செய்யவில்லை என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்நிலையில் தற்போது மகாராஷ்டிரா சூழல் குறித்து தனது நிலைபாடினை வெளிப்படுத்தியுள்ளார்.
சிவசேனா-NCP-காங்கிரஸ் ஒருங்கிணைப்பு சத்தியப்பிரமாண விழாவிற்கு முன்னதாக மகாராஷ்டிராவிற்கான அவர்களின் பொதுவான குறைந்தபட்ச திட்டத்தை வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.