கொல்கத்தாவில் இன்று எதிர்க்கட்சிகளின் மெகா சங்கமம் "ஒற்றுமை இந்தியா மாநாடு" என்று பெயரில் நடந்து வருகிறது. மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சி சார்பில் அகிலேஷ் யாதவ், லோக்தந்திரிக் ஜனதா தளம் கட்சி சார்பில் சரத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஆந்திர முதல்வர், டெல்லி முதல்வர், லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ், தேவகவுடா, ஜிக்னேஷ் மேவானி, காஷ்மீர் தலைவர்கள் மற்றும் பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்களான யஷ்வந்த் சின்ஹா மற்றும் சத்ருகன் சின்ஹா உட்பட பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
இந்த கூட்டம் கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேடு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, கடந்த நான்கு ஆண்டுகளாக மோடி அரசு மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என மத்திய அரசை குற்றம் சாட்டினார்.
நாட்டின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை கண்டுள்ளது. வரலாறு காணாத அளவில் விலைவாசி உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். ஆனால் இதைப்பற்றி எதுவும் கவலையில்லாமல், ஊழல் செய்து வருகிறது பாஜக அரசு. இந்த ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும். தங்கள் ஆட்சி இல்லாத மாநில அரசுகளை பாஜக அரசு துன்புறுத்துகிறது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை மிரட்டுகிறது.
ஜன் தன் யோஜனா, முத்ரா கடன் திட்டம், கறுப்புப் பணம் ஒழிப்பு, 2 கோடி வேலை வாய்ப்பு, அச்சே தின் எனக்கூறி மக்கள் ஏமாற்றியது மோடி அரசு. அவர்கள் கூறிய வாக்குறுதி நிறைவேற்ற வில்லை. மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டனர். இப்பொழுது இருந்தே பாஜகவுக்கு பயம் வந்துவிட்டது. வரும் மக்களவை தேர்தலில் மோசமான விளைவை சந்திக்கும் பாஜக. பாஜக அரசை விரட்டி அடித்து நமது நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றுவோம் என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.