21 துப்பாக்கி குண்டுகள் முழங்க கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது!
முன்னாள் ராணுவ அமைச்சரும் கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கர் (வயது 63) உடல் நலக்குறைவால் நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கோவா-வின் பான்ஜிம் நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு பாரிக்கரின் உடல் இன்று காலை கொண்டு வரப்பட்டது, அங்கு 10.30 மணி வரை அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக கலா அகாடமிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
LIVE: Manohar Parrikar cremated with full military honours. He was accorded gun salute too.#ManoharParrikarAmarRahe #AlvidaParrikarhttps://t.co/aVoV2HWZyn pic.twitter.com/d5v93xD7I7
— Zee News (@ZeeNews) March 18, 2019
இதனையடுத்து அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும், பாரிக்கர் மறைவுக்கு இன்று தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், கோவா அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பின்னர் இறுதிச்சடங்குகள் முடிந்து மாலை சுமார் 5 மணியளவில் மனோகர் பாரிக்கரின் உடல் தேசியக்கொடியால் மூடப்பட்டு, ராணுவ வாகனத்தில் ஏற்றி பனாஜி நகரில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மிராமர் கடற்கரை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு கோவா முன்னாள் முதல்வர் தயானந்த் பன்டோக்கர் நினைவிடத்தின் அருகே வைக்கப்பட்ட மனோகர் பாரிக்கரின் உடலுக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.
அவரது உடலில் போர்த்தப்பட்டிருந்த மூவர்ண தேசியக்கொடி பாரிக்கரின் இரு மகன்களான அபிஜத் மற்றும் உதபால் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.