மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி அரசு மீது இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு!!
மஹாராஷ்டிரா முதல்வராக நேற்று முன்தினம் பதவியேற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மும்பையில் உள்ள தலைமைச் செயலகமான மந்திராலயாவுக்கு நேற்று வந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த சத்திரபதி சிவாஜி மஹாராஜ் புகைப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்திய பின் எட்டாவது மாடியில் உள்ள முதல்வர் அலுவலகத்துக்கு வந்த அவர் முதல்வர் பொறுப்பை ஏற்றார். தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.முன்னதாக மும்பையில் உள்ள தன் வீட்டிலிருந்து தலைமைச் செயலகத்துக்கு காரில் வந்த உத்தவ் தாக்கரேவுக்கு வழி நெடுகிலும் சிவசேனா கட்சியினர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.
சில மாதங்களுக்கு முன் மும்பையில் ஆரே பகுதியில் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் வாகன நிறுத்தம் அமைக்க ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இந்த வாகன நிறுத்தம் அமைப்பதற்கு தடை விதிப்பதாக முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று அறிவித்தார். 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மைக்கு 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. சிவசேனா கட்சியில் 56, தேசியவாத காங்கிரசில் 54, காங்கிரசில் 44 என மொத்தம் 154 உறுப்பினர்கள் உத்தவ்தாக்கரே அரசுக்கு உள்ளனர்.
இதுதவிர சுயேட்சை மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவும் அவருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கள் கூட்டணிக்கு 165 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக மகாராஷ்டிர விகாஸ் முன்னணித் தலைவர்கள் ஆளுநரிடம் கூறியிருந்தனர். எனவே, உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிப்பதில் பிரச்சனை ஏதும் இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. பிற்பகல் 2 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என பேரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
105 இடங்களைப் பெற்றுள்ள பா.ஜ.க. எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது. இதனிடையே, பாஜகவைச் சேர்ந்த தற்காலிக சபாநாயகர் மாற்றப்பட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் திலீப் வால்சே தற்காலிக சபாநாயகராக ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார்.