Lok Sabha Elections: இந்தியாவில் இது தேர்தல் திருவிழா காலம். இன்னும் சில நாட்களில் நாடு முழுதும் மக்களவைத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரங்கள் நடந்துவருகின்றன. சின்னத்தை பார்த்தும், பிறர் சொல்வதைக் கேட்டும் மக்கள் வாக்களிப்பது சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் அரசியல் புரிதல் அதிகமாகவே உள்ளது. சிறு ஆதாயங்களுக்காக ஆசைப்பட்டு ஐந்தாண்டுகள் அல்லல்பட மக்கள் தயாராக இல்லை. வேட்பாளரின் நோக்கம், அவர் செய்துள்ள சமூக பணிகள், மக்கள் சேவையில் அவரது அனுபவம், ஆர்வம், தகுதி என வாக்களிக்கும் முன் மக்கள் அனைத்தையும் அலசி ஆராய்கிறார்கள்.
பொதுவாக அனைத்து தேர்தல்களிலும் சில தொகுதிகள் மிக பிரபலமான தொகுதிகளாக இருக்கும். அவற்றில் நிற்கும் வேட்பாளர்கள், மக்கள், அத்தொகுதியின் சிறப்பம்சங்கள் என பல காரணங்களால் சில தொகுதிகள் மக்கள் மனதில் பதிந்துவிடும். அப்படிப்பட்ட தொகுதிகளில் உத்தர பிரதேசத்தின் அமேதியும் ஒன்று.
காந்தி குடும்பத்தின் கோட்டை
அமேதி பல ஆண்டுகளுக்கு காந்தி குடும்பத்தின் கோட்டையாக இருந்து வருகிறது. எனினும், 2019 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை ஸ்மிருதி இரானி 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இன்னும் சில நாட்களில் நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் குறித்த குழப்பம் நிலவும் நிலையில், மத்திய அமைச்சரும் பாஜக வேட்பாளருமான ஸ்மிருதி இரானி, அமேதியில் போட்டியிட காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு சவால் விடுத்துள்ளார். அமேதியில் இரண்டு முறை ஸ்மிருதி இரானி மற்றும் ராகுல் காந்தி இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்மிருதி இரானியின் சவாலையடுத்து அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி மற்றும் ஸ்மிருதி இரானி இடையே போட்டி ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராகுல் காந்தி இங்கு 3 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். அமேதியில் மட்டும் போட்டியிட முடியுமா என ராகுல் காந்திக்கு ஸ்மிருதி இரானி சவால் விடுத்துள்ளார். எனினும், ராகுல் மீண்டும் அமேதியிலிருந்து போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகளை பற்றி காங்கிரஸ் இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் அமேதியில் ஸ்மிருதி இரானி தனது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அவர் தொடர்ந்து அமேதி கோவில்களுக்கு சென்று வருகிறார்.
அமேதி காங்கிரஸ் அலுவலகத்தில் நிலவும் அமைதி
உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதி 2019 வரை காங்கிரசின் கோட்டையாக இருந்தது. இங்கு மூன்று முறை எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி, 2019ல் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். முன்னதாக 2014ல் ஸ்மிருதி இரானியை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோற்கடித்தார். எனினும், இப்போது அமேதியில் நிலைமை மாறிவிட்டதாகத் தெரிகிறது. அமேதி காங்கிரஸ் அலுவலகத்தில் அமைதி நிலவுகிறது. பெரும்பாலான கேபின்கள் பூட்டப்பட்டுள்ளன. அமேதி சுற்றுப்பயணத்தில் ராகுல் காந்தி தங்கியிருந்த அலுவலகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையும் வெறிச்சோடி காணப்படுகிறது.
ராகுல்தான் வேண்டும்: உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள்
எனினும், நிலைமை இப்படி இருந்தாலும், அமேதியின் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியைதான் இங்கிருந்து வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். அமேதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் ‘ராகுல் பின் அமேதி சுன்’ அதாவது ராகுல் காந்தி இல்லையென்றால், அமேதியில் களையில்லை’ என்ற கோஷத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ராகுல் மீண்டும் அமேதியில் இருந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று உள்ளூர் காங்கிரஸ் தொண்டர்கள் விரும்புவதையே இது காட்டுகிறது.
பொதுமக்களின் விருப்பம் என்ன?
அமேதியில் ஸ்மிருதி இரானியா அல்லது ராகுல் காந்தியா என்ற கேள்வி எழுப்பினால், இன்றைய சூழலில் இருவருக்கும் சமமான ஆதரவு இருப்பதாகவே தெரிகின்றது. இந்த முறையும் இங்கு ஸ்மிருதி இரானிதான் வெற்றி பெற வேண்டும் என ஒரு சாரார் கூறும் அதே வேளையில், ராகுல் காந்தி இம்முறை அமேதியில் நின்றால் கண்டிப்பாக வெல்வார் என ஒரு சாரார் கருதுகிறார்கள். இருப்பினும், பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சிகள் மேலும் அதிருப்தியில் இருக்கும் சிலரும் உள்ளனர். சஞ்சய் காந்திக்குப் பிறகு அமேதிக்காக யாரும் சரியாக பணியாற்றவில்லை என்பது அவர்களது கருத்தாக உள்ளது.
மகனுக்கு பின் மாப்பிள்ளையா?
இந்த நிலையில்ம் சமீபத்தில் அமேதி மக்கள், அங்கு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றும் தான் தேர்தல் களத்தில் இறங்க முடிவு செய்தால் அது அமேதியில் இருந்துதான் இருக்க வேண்டும் என கட்சி தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்றும் பிரயங்கா காந்தி வத்ராவின் கணவர் ராபர்ட் வத்ரா கூறியுள்ளார். மேலும் அமேதியின் தற்போதைய எம்.பி ஸ்மிருதி இரானி, தொகுதியை புறக்கணித்து, காந்தி குடும்பத்திற்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்த பதவியை தவறாகப் பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.
நாட்டின் முக்கியமான, பிரபலமான, விஐபி தொகுதிகளில் ஒன்றாக உள்ள அமேதியில் யாருக்கும் யாருக்கும் மோதல்? ஸ்மிருதி இரானி தொடர் வெற்றியை பதிவு செய்வாரா? ராகுல் தன் கோட்டையை மீண்டும் பிடிப்பாரா? புது முகங்களின் அறிமுகம் நடக்குமா? இன்னும் சில நாட்களில் விடை தெரியும்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ