வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி நாள் வருகிற 31-ம் தேதி. இதுவரை 87 கோடி வங்கிகணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிட்டதாக ஆதார் நிறுவனம் தகவல் தெரிவித்து உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆதார் அட்டைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. கியாஸ் மானியம் உள்பட மத்திய அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
மேலும் வங்கி கணக்கு, ‘பான்கார்டு’ செல்போன் எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி நாள் இம்மாதம் (மார்ச்) 31-ம் தேதி ஆகும். மேலும் செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கும் இதுவே கடைசி நாள் ஆகும்.
இந்த நிலையில், நாட்டின் ஒட்டு மொத்த வங்கி கணக்குகளில் 80 சதவீத வங்கி கணக்கு களுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டதாக ஆதார் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “நாட்டில் சுமார் 109.9 கோடி வங்கி கணக்குகள் உள்ளன. அவற்றில் ஏறத்தாழ 87 கோடி வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது. அதில் 58 கோடி வங்கி கணக்குகளுக்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு விட்டன” என்றார்.
இதுகுறித்து ஆதார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் புஷ்கான் பாண்டே கூறுகையில் “80 சதவீத வங்கி கணக்குகளுடன் ஆதார் இணைக்கப்பட்டு விட்டது. எஞ்சி உள்ள வங்கி கணக்குகள் கூடிய விரைவில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு விடும் என நம்புகிறோம்” என கூறினார்.
அதே போல் இந்தியா முழுவதும் இணைப்பில் உள்ள 142.9 கோடி செல்போன் எண்களில், 85.7 கோடி செல்போன் எண்களுடன் ஆதார் இணைக்கப்பட்டு விட்டதாகவும் ஆதார் நிறுவனம் தெரிவித்து உள்ளது.