தலித் எம்.எல்.ஏ அமர்ந்து போராட்டம் நடத்திய இடத்தை தூய்மையாக்க காங்கிரஸ் கட்சியினர் மாட்டு சாணம் கலந்த நீரை தெளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நட்டிகா தொகுதி எம்.எல்.ஏ இருப்பவர் கீதா கோபி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இவர், திரிபிரயா முதல் செர்ப்பு மாநில நெடுஞ்சாலை வரை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று அப்பகுதி காவல்நிலைய வளாகத்தில் போராட்டம் நடத்தினார். பொதுப்பணித்துறையினர் அவரது கோரிக்கையை ஏற்றதையடுத்து, அவர் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
இதையடுத்து, எம்.எல்.ஏ கீதா அந்த இடத்தை விட்டு சென்ற பிறகு, அங்கு சென்ற இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் எம்.எல்.ஏ போராட்டம் நடத்திய இடத்தில் மாட்டு சாணம் கலந்த நீரை தெளித்தனர். கீதா, தலித் என்பதால் அந்த இடத்தை தூய்மையாக்குவதற்காக அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர். சாதி பாகுபாடு பார்ப்பதாக காங்கிரஸ் கட்சியினர் மீது காவல்துறையில் புகாரளித்துள்ள கீதா, மேலும் முதலமைச்சர் பினராயி விஜயன், சபாநாயகர் ஸ்ரீ ராம கிருஷ்ணன் ஆகியோரிடமும் புகாரளிக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர் “ போராட்டம் நடத்த பல்வேறு ஜனநாயக வழிகள் உள்ள போது அவர்கள், தலித் பெண்ணை அவமதிப்பதற்காக மட்டுமே காங்கிரஸ் தொண்டர்கள் மாட்டு சாணம் கலந்த நீரை தெளித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
இதனிடையே காங்கிரஸ் கட்சியினரின் செயலுக்கு சுகாதாரம், சமூக நீதி, பெண்கள் துறை அமைச்சர் கே.கே ஷைலஜா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் “ எம்.எல்.ஏ கீதாவிற்கு எதிரான சாதிய பாகுபாடு ஒரு குற்ற நடவடிக்கை மட்டுமல்லாமல் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சமூக நீதியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வரும் கேரளாவில் இது போன்ற சம்பவங்கள் நிச்சயம் அரங்கேற கூடாது. இது மீண்டும் தீண்டாமை கொடுமையை நினைவுப்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.