கேரள மாநிலத்தைச் சேர்ந்த MLA ஒருவர் தனது மகள் திருமணத்திற்கா வித்தியாசமான முறையில் அழைப்பிதழை உருவாக்கியுள்ளார்!
கேரளா சட்டமன்றத்தில் சுயேட்சை MLA-வாக இருப்பவர் அப்துர் ரஹிம். இவரின் மகள் ரிஸ்வானாவிற்கு தற்போது திருமண ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகிறது. வரும் 22-ம் தேதி மலப்புரம் மாவட்டம் திரூரில் திருமணம் நடைபெறவுள்ளது.
இந்த திருமண நிகழ்வினை வித்தியாசமாக செய்ய விரும்பிய இவர், அதனை திருமண பத்திரிக்கையில் இருந்து ஆரம்பித்துள்ளார். அதன்படி அழைப்பிதழை இதுவரை யாரும் உருவாக்காத வகையில் கைகளால் தயாரிக்கப்பட்ட காகிதத்தில், பூக்களின் விதைகளும், காய்கறிகள், மூலிகை விதைகளும் கலந்து உறுவாக்கியுள்ளார். இந்த அழைப்பிதழ் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வழக்கமாக நம் வீட்டிற்கு வரும் அழைப்பிதழ்களை நாம் தூக்கி எறிந்துவிடுவோம் அல்லது எரித்துவிடுவோம். ஆனால், இந்த அழைப்பிதழைப் பூமியில் சிறிது ஆழக் குழிதோண்டி மண்ணில் புதைத்து சிறிது நீர் விட்டால் போதும். சில நாட்கள் கழித்து அதிலிருந்து ஏராளமான மூலிகைச் செடிகளும், பூச்செடிகளும், மர விதைகளும் துளிர்விட்டிருக்கும்.
இந்த அழைப்பிதழினை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என விரும்பிய அவர் இந்த அழைப்பிதழின் பின்புறம், ''அழைப்பிதழை வீணாக்கி வீசிவிடாதீர்கள் மண்ணில் புதையுங்கள் முளைத்து வருவேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்துர் ரஹிம்-ன் இந்த புதிய முயற்சி சுற்றுசூழல் பாதுகாப்பிற்கான மாற்றத்தை, விழிப்புனர்வை கொண்டுவரும் என கருதப்படுகிறது.