கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ‘குடிநீர் பெல்‘ முறை அமல்படுத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
கர்நாடகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் சரியாக குடிநீரை குடிப்பது இல்லை. இதனால் மாணவர்களின் உடல் ரீதியாக சில பாதிப்புகள் ஏற்படுவதாகவும் புகார்கள் நீண்ட காலமாக இருக்கின்றன. மேலும் காலை, மாலை சிறு இடைவேளை, மதிய உணவு நேரங்களில் மாணவர்கள் தண்ணீர் அருந்த அறிவுரை வழங்க வேண்டும். போதுமான அளவு தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் நன்மை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்த வேண்டும்.
இந்த நிலையில் முன்னதாக கேரளா மாநிலத்தில், குடிநீர் குடிக்கவே காலை மற்றும் நண்பகலில் 2 முறை ‘குடிநீர் பெல்‘ நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 14-ம் தேதி நடந்த குழந்தைகள் தின விளையாட்டு விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பதற்கு தமிழகத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தற்போது இந்த நடைமுறை கர்நாடக மாநிலத்திலும் அமல்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் ஏற்கனவே தனது முகநூல் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் ‘குடிநீர் பெல்‘ நடைமுறை அமல்படுத்த மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
காலையில் ஒரு முறை, மதிய உணவுக்கு பிறகு என ஒரு முறை ஒரு நாளைக்கு 2 முறை இந்த ‘குடிநீர் பெல்‘ ஒலிக்க செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் 10 நிமிடம் வீதம் 20 நிமிடம் ஒதுக்க வேண்டும். இந்த 20 நிமிடத்தில் குழந்தைகள் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நடைமுறையானது கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இந்த விதிமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.