கவிழுமா குமாரசாமி அரசு?... நீடிக்கும் கர்நாடக அரசியல் குழப்பம்...

14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா காரணமாக குழப்பம் நீடித்து வருவதால், குமாரசாமி அரசை காப்பாற்றும் முயற்சியில் காங்கிரஸ், JD (S) தலைவர்கள் தீவிரம்!!

Last Updated : Jul 8, 2019, 07:54 AM IST
கவிழுமா குமாரசாமி அரசு?... நீடிக்கும் கர்நாடக அரசியல் குழப்பம்...  title=

14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா காரணமாக குழப்பம் நீடித்து வருவதால், குமாரசாமி அரசை காப்பாற்றும் முயற்சியில் காங்கிரஸ், JD (S) தலைவர்கள் தீவிரம்!!

கர்நாடகாவில் காங்கிரஸ், ஜனதாதளம் கூட்டணி ஆட்சிக்கான சிக்கல் அதிகரித்த வண்ணம் உள்ளது. 14 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ள காங்கிரசும் மதசார்பற்ற ஜனதா தளமும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ராஜினாமா செய்யும் முடிவில் மாற்றமில்லை என அதிருப்தி எம்.எல்.ஏக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று அமெரிக்காவில் இருந்து திரும்பிய முதலமைச்சர் குமாரசாமி, அவரின் தந்தை தேவகவுடா ஆகிய இருவரும், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர்.

அதிருப்தி எம்.எல்.ஏக்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ராமலிங்க ரெட்டிக்கு துணை முதலமைச்சர் பதவியைக் கொடுத்து சமாதானப்படுத்துமாறு காங்கிரசுக்கு குமாரசாமி அறிவுறுத்தியுள்ளார் . அதே போன்று மும்பை ஓட்டலில் தங்கியிருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை அழைத்து அவர்களை சமதாதானப்படுத்த முயற்சிக்குமாறு சித்தராமையாவிடம் குமாரசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

நிலைமை மோசமடைந்து வருவதால், 9 ஆம் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், காங்கிரஸ் தரப்பில் மேலும் 5 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக பாஜகவினர் கூறுகின்றனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “கர்நாடக அரசியலில் தற்போது எழுந்துள்ள நிலை குறித்து நாங்கள் விவாதித்தோம். முதல்-மந்திரி குமாரசாமி இன்று (அதாவது நேற்று) இரவு பெங்களூரு வருகிறார். அவர் வந்தவுடன் இந்த அரசியல் நிலவரம் குறித்து முடிவு எடுப்போம். கூட்டணி அரசை காப்பாற்ற எந்த தியாகமும் செய்வோம்” என்றார்.

இப்பிரச்சினை குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, கர்நாடகாவில் இடைத் தேர்தல் வர விடமாட்டோம் என்று கூறினார். மேலும், பாஜகவில் உள்ள சில எம்.எல்.ஏக்களை இழுப்பதற்கும் காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இப்பிரச்சினையால் 12 ஆம் தேதி தொடங்க உள்ள சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரை ஒத்தி வைக்குமாறு சபாநாயகரை முதலமைச்சர் குமாரசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Trending News