ரயில்வே உணவக ஒப்பந்தத்தில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 - 2009 ஆம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக பணியாற்றிவந்தார். தனது பதவிகாலத்தில் ரெயில்வேயின் IRCTC-க்கு சொந்தமான ஓட்டல்களை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. ராஞ்சி, பூரி மற்றும் பாட்னாவில் உள்ள ரயில்வே உணவகங்களுக்கான ஒப்பந்தங்கள் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக லாலுபிரசாத், அவரது மனைவி ராப்ரிதேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மற்றும் IRCTC-ன் அப்போதைய அதிகாரிகள் மீது CBI வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் லாலு, மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்த மனுக்களை விசாரித்த டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் ரூ. 1 லட்சம் பிணை தொகையுடன், அடுத்த விசாரணை பிப்ரவரி 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.