ஜூலை 31 வரை சர்வதேச விமான சேவைகளின் இயக்கம் நிறுத்தப்படும் என விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது..!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச விமான சேவைக்கான தடை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) வெள்ளிக்கிழமை அறிவித்தது. கொரோனா தாக்கம் அதிகரித்ததால் நாட்டில் மார்ச் 23 ஆம் தேதி முதல் அனைத்து சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. பின்னர் முழு முடக்க காலத்தில் வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்காக விமான சேவைகள் பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில், மே மாதம் இறுதியில் உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. ஆனால், சர்வதேச விமான சேவைகள் இயக்கப்படவில்லை. அப்போது ஜூலை 15 ஆம் தேதி வரை சர்வதேச விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த தடை மேலும் 15 நாட்களுக்கு அதாவது ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. உள்நாட்டு விமான சேவைகளை 33%-ல் இருந்து 45% ஆக அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
READ | Big Breaking: நாட்டின் முதல் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகப்படுத்தப்படும்
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 6,25,544 ஆக உயர்ந்துள்ளது. இன்றைக்கு மட்டும் 20,903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 18,213 பேர் மொத்தம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் 3,79,892 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்கள். தற்போது 2,27,439 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் தமிழ்நாட, டெல்லி, குஜராத், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான் மாநிலங்கள் உள்ளன.