மத்திய பட்ஜெட்டு: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து!!

Last Updated : Feb 2, 2019, 04:25 PM IST
மத்திய பட்ஜெட்டு: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து!! title=

2019-20-ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையினை மத்திய நிதி அமைச்சரும் (பொறுப்பு), ரயில்வே அமைச்சருமான பியூஷ் கோயல் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். 

அந்தவகையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளனர். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:-

இடைக்கால நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்குப் பதில் முழுமையான நிதி நிலை அறிக்கையை பாஜக அரசு தாக்கல் செய்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ள சில அறிவிப்புகள் உள்நோக்கம் நிறைந்த அறிவிப்புகளாகவே அமைந்துள்ளன. 2 ஹெக்டேர் நிலத்துக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி, ரூ.5 லட்சம் வருமான வரி உச்சவரம்பு என்ற இரட்டை அறிவிப்புகள் வெளிப்படையாக வரவேற்புக்குரியவை போல் இருந்தாலும், அறிவிக்கப்பட்ட நேரம் - அறிவிக்கப்பட்ட தொகை - அதை வழங்கும் நேரம் எல்லாம் விலகிச் சென்று விட்ட விவசாய வாக்காளர்களில் ஒரு சிறு பகுதியினரை இதன் மூலமாவது கவர்ந்திழுத்து, அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு மக்களவைத் தேர்தலில் கரையேறி விட முடியுமா என்ற கனவுலகில் மத்திய பாஜக அரசு பயணிப்பது புரிகிறது. சுருக்கமாக கூறினால் பாரத மக்களை ஆசை வார்த்தை காட்டி திசைதிருப்பும் மலிவான தந்திரத்துடன் கூடிய ஒரு தேர்தல் அறிக்கை.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:-

பாமக நிழல் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மூலதன மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அதற்கு மதிப்பளிக்கும் வகையில், 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

வருமான வரி செலுத்தாமல் இருப்பதற்கான வருவாய் உச்சவரம்பு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் வருமானவரி விகிதங்களில் மாற்றம் செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

வேலைவாய்ப்புகளைப் பெருக்க போதிய அளவில் திட்டங்கள் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. மொத்தத்தில் தேர்தலை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜெட் வரவேற்கத்தக்க பல அம்சங்களையும், ஏமாற்றமளிக்கும் சில அம்சங்களையும் கொண்டுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை

வருமானவரி விலக்கு உள்ளிட்ட ஒரு சிலவற்றை தவிர வாக்குகளை வாங்குவதற்காக வார்த்தை ஜாலங்கள் நிறைந்த, காகித பூமாலையாக பட்ஜெட் அமைந்து இருக்கிறது. தமிழகத்திற்கு தனித்துவமான திட்டம் எதுவும் இல்லை. தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்போக்குடன் மத்திய அரசு நடத்தி வருகிறது. இதனை மாற்றி தமிழகத்தின் குரலை டெல்லியில் வலுவாக ஒலிப்பதற்கு ஏற்ற சூழலை தமிழக மக்கள் வருகிற தேர்தலில் உருவாக்குவார்கள்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:-

பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகளைக் குறைக்கவும் எந்த முயற்சியும் இல்லை. நாட்டின் உயிர் நாடியான வேளாண்மை நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. கடன் சுமையால் விவசாயிகளின் தற்கொலைகள் நீடித்து வரும் நிலையில், வேளாண் கடன் தள்ளுபடி பற்றிய அறிவிப்போ, விவசாய விளைப்பொருட்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய நிலையான விலை நிர்ணயக்கொள்கை பற்றிய விவரமோ மத்திய பட்ஜெட்டில் இல்லை.

மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு, சென்னை-தூத்துக்குடி சரக்கு ரெயில் பாதை, கூடுதல் பயணிகள் ரெயில் விடுதல் போன்று எதிர்பார்க்கப்பட்டத் திட்டங்களுக்கு அறிவிப்பு கூட இல்லை.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:-

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 1.30 லட்சம் கோடி ரூபாய் அளவு கருப்பு பணம் வெளிவந்துள்ளது என்பது, ஏற்கனவே வெளிவந்த கருப்பு பணம் குறித்த ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு முரணாக உள்ளது. இடைக்கால பட்ஜெட் சில அம்சங்களைத் தவிர பெரிய அளவில் பேசும்படியாக இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:-

விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய முன்வராத அரசு உரம், விதைகள் உள்ளிட்டவைகளுக்கு மானியம் வழங்குவதை மட்டும் கோடிட்டு காட்டுவது விவசாயிகளுக்கு முழு பயன் தராது. மேலும் தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள விவசாயிகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு இப்பட்ஜெட்டில் சலுகைகள், நிவாரண உதவித்தொகை அமையவில்லை.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:-

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ததில் பாராளுமன்ற மரபுகளை பாஜக மத்திய அரசு தகர்த்துள்ளது. ஆட்சிக் காலம் நிறைவடையும் நேரத்தில் பாராளுமன்றத்தை தேர்தல் பிரசார மேடையாக பட்ஜெட் தாக்கல் நிகழ்வில் பாஜக மாற்றியுள்ளது. இடைக்கால பட்ஜெட் வஞ்சக எண்ணங்களை மூடி மறைத்து, அலங்கரிக்கப்பட்டிருக்கும் வாய்பந்தல். வாழ்க்கைக்கு உதவாது என்பதை பொதுமக்கள் எளிதில் உணர்வார்கள்.

Trending News