அதிநவீன தொழிநுட்பங்களை கொண்ட அபாச்சி ரக 8 ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் இன்று இணைக்கப்பட்டன.
இந்திய விமானப்படை செவ்வாய்க்கிழமை காலை, அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை பதான்கோட் விமான நிலையத்தில் தமது படையில் சேர்த்துக்கொண்டது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எட்டு புதிய அப்பாச்சி AH-64E தாக்குதல் ஹெலிகாப்டர்கள் விமானப்படையின் போர் சக்திகளுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கவுள்ளது.
பதான்கோட் விமான நிலையத்தில் நடைபெற்ற விழாவில் விமானப்படைத் தலைவர் மார்ஷல் பி.எஸ்.தனோவா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். விமானப்படைத் தலைவரும், மேற்கு விமான தளபதியுமான ஏர் மார்ஷல் ஆர் நம்பியார் பதான்கோட் விமான நிலையத்தில் விழா துவங்குவதற்கு முன்பு ஒரு 'பூஜை' விழாவை நிகழ்த்தினார்.
முன்னதாக இந்திய விமானப் படைக்காக அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட அப்பாச்சி ரக 22 போர் ஹெலிகாப்டர்கள் ( Apache AH-64E) வாங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. போயிங் நிறுவனம் இந்த ஹெலிகாப்டர்களை தயாரித்து வருகிறது.
இந்த ஒப்பந்தத்தின் படி கடந்த ஜூலை மாதம் 4 ஹெலிகாப்டர்கள் உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்திற்கு வந்து சேர்ந்தன. ஆனால், முறைப்படி அவை விமானப்படையில் இணைக்கப்படவில்லை. அதன்பின்னர் மேலும் 4 ஹெலிகாப்டர்கள் வந்து சேர்ந்தன. இந்நிலையில் இந்த 8 விமானங்களும் இன்று விமானப்படையில் முறைப்படி இணைக்கப்பட்டன.
#Punjab: IAF Chief BS Dhanoa arrives at the Pathankot Air Base where Apache helicopter of the Indian Air Force are to be inducted into IAF today. pic.twitter.com/U6GrwjuKCO
— ANI (@ANI) September 3, 2019
இதன்மூலம் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களை இயக்கும் உலகின் 14-வது நாடு இந்தியா என்னும் பெருமையினை பெற்றுள்ளது.
இதுகுறித்து இந்திய விமானப்படை செய்தித் தொடர்பாளர் அனுபம் பானர்ஜி கூறுகையில், "தற்போது வரை, எங்களிடம் 8 விமானங்கள் உள்ளன. 22 விமானங்கள் படிப்படியாக வரும், அனைத்தும் விமானப்படையில் சேர்க்கப்படும். நம்மிடம் முன்னதாக சக்திவாய்ந்த தாக்குதல் ஹெலிகாப்டர்கள் இருந்தன, ஆனால் தற்போது களமிறக்கப்பட்டுள்ள Apache AH-64E விமானங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இவை விமான படையின் பலத்தை மேலும் அதிகரிக்கும்" என தெரிவித்துள்ளார்.