பாக். சிறையில் குல்பூ‌ஷன் அடைத்து வைக்கப்பட்டிருப்பது சட்ட விரோதமானது: ஜெய்ஷங்கர்

குல்பூ‌ஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டிய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 18, 2019, 06:50 PM IST
பாக். சிறையில் குல்பூ‌ஷன் அடைத்து வைக்கப்பட்டிருப்பது சட்ட விரோதமானது: ஜெய்ஷங்கர் title=

புதுடெல்லி: பாகிஸ்தான் சிறையில் குல்பூ‌ஷன் ஜாதவ் அடைத்து வைக்கப்பட்டிருப்பது சட்ட விரோதமானது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், பயங்கரவாத செயல்களை தூண்டியதாகவும் 48 வயதுடைய குல்பூஷண் ஜாதவ் மீது முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவருக்கு தூக்கு தண்டனை வழங்கி, கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

அந்த தீர்ப்பை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த 2017 மே 18 ஆம் தேதி சர்வதேச நீதிமன்றத்தில் 10 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போதே வழக்கு விசாரணை முடிவடையும் வரையில் குல்பூஷண் ஜாதவுக்கான தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த சர்வதேச நீதிமன்றம், இருதரப்பு வாதங்களை கேட்டு வந்தனர். இந்தநிலையில், நேற்று இந்த வழக்கு சம்பந்தமான தீர்ப்பை சர்வதேச நீதிமன்றம் வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியை நாட குல்பூஷணுக்கு உரிமை உண்டு. பாகிஸ்தான் அரசு குல்பூஷனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு செய்ய வேண்டும். அதேவேளையில் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் குல்பூஷண் ஜாதவிற்கு விதித்த மரண தண்டனைக்கு தடை விதிக்கிறோம் என்றுக் கூறியுள்ளது.

இதனையடுத்து, இன்று வழக்கு குறித்து விளக்கம் அளித்த இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவிஷ்குமார் கூறுகையில், குல்பூஷன் ஜாதவ் வழக்கில் ஐ.சி.ஜே எடுத்த முடிவு பாகிஸ்தானின் வெற்றி என்ற கூற்றை நிராகரித்தது. பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு சில நிர்பந்தங்கள் உள்ளன. இதன் காரணமாக அவர்கள், தனது சொந்த மக்களிடம் பொய் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. 

அவர்கள் வேறு ஒரு தீர்ப்பை படிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். சர்வதேச நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு 42 பக்கங்கள் கொண்டது. அவர்களால் (பாகிஸ்தான்) 42 பக்கங்களைப் படிக்க பொறுமை இல்லையென்றால், குறைந்தது 7 பக்க செய்திக்குறிப்பைப் படிக்க வேண்டும். அங்கு ஒவ்வொரு புள்ளியும் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் எனக் கூறினார். 

அதேபோல இன்று ராஜ்யசபாவில் பேசிய மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் கூறுகையில், குல்பூ‌ஷன் ஜாதவ் மீது போலியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவரை பாகிஸ்தான் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது சட்ட விரோதமானது. 

சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குல்பூ‌ஷன் ஜாதவ் எந்தவித தவறும் செய்யவில்லை என்று நிரூபணமாகி இருக்கிறது. எனவே குல்பூ‌ஷன் ஜாதவை உடனே விடுதலை செய்ய வேண்டும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும் எனக் கூறினார்.

Trending News