இந்தியாவில் தற்போது 2293 கட்சிகள் இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2 மாதத்தில் மட்டும் புதிதாக 149 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது!
பாராளுமன்ற தேர்தலுக்கான வேலைகள் நாடெங்கிலும் மும்முறமாக நடைப்பெற்று வரும் நிலையில் தற்போது இந்தியாவில் இருக்கும் கட்சிகள் குறித்த கணிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் இந்த பட்டியலின் படி கடந்த மார்ச் 9-ஆம் நாள் வரை இந்தியாவில் பதியப்பட்டிருக்கும் கட்சிகளின் எண்ணிக்க 2,293.
ஆண்டுதோறும் பல கட்சிகள் தொடங்கப்பட்டு வருகின்றன, எனினும் தற்போது பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் கட்சிகள் தொடங்குவது தொடர்பான செய்திகள் சற்று அதிகமாகவே வெளியாகி வருகிறது.
அதன்படி பாராளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முந்தைய நாள் வரையில் இந்தியாவில் 2293 கட்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் தேசிய அளவில் 7 கட்சிகளும், மாநில அளவில் 59 கட்சிகளும் மட்டுமே தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப் பட்டவையாக உள்ளன. மற்ற கட்சிகள் அனைத்தும் உரிய அங்கீகாரம் பெறாதவை என பட்டியலிடப்படுகிறது.
கடந்த பிப்ரவரி, மார்ச் மாதத்தில் மட்டுமே புதிதாக 149 கட்சிகள் தொடங்கப்பட்டு தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பட்டியலில் தமிழகத்தின் கோயம்பத்தூரைச் சேர்ந்த புதிய தலைமுறை மக்கள் கட்சியும் அடங்கும்.
புதிதாக தொடங்கப்பட்ட புதிய கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படாத நிலையில், வரும் தேர்தலில் இலவச சின்னங்களை கொண்டு இக்கட்சியினர் போட்டியிடலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரவித்துள்ளது. அதன்படி 84 இலவச சின்னங்களை இந்திய தேர்தல் ஆணையம் தற்போது வேட்பாளர்களுக்கு வழங்கியுள்ளது.
அரசியல் கட்சிகள் தேசிய அளவில் (அல்லது) மாநில அளவில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக குறிப்படப்பட வேண்டுமென்றால், குறிப்பிட்ட அந்த கட்சி கடந்த தேர்தலில் (சட்டமன்ற தேர்தல் அல்லது மக்களவை தேர்தல்) குறிப்பிட்ட அளவு தொகுதிகளில் வெற்றிப்பெற்றிருக்க வேண்டும், அல்லது குறிப்பிட்ட அளவு வாக்கு சதவிகிதங்களை பெற்றிருத்தல் அவசியம் ஆகும்.