இந்தியா 68-வது குடியரசு தினவிழா கொண்டாடியது

Last Updated : Jan 27, 2017, 09:01 AM IST
இந்தியா 68-வது குடியரசு தினவிழா கொண்டாடியது title=

நாட்டின் 68-வது குடியரசு தின விழா டெல்லியில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் முதல் முறையாக தேசிய பாதுகாப்புப் படையின் கறுப்பு பூனை வீரர்கள், தேஜாஸ் போர் விமானங்கள், தனுஷ் பீரங்கிகள் அணிவகுப்பில் பங்கேற்றன. 

டெல்லியில் குதிரைப்படை வீரர்கள் அணிவகுக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சிறப்பு விருந்தினரான அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நயன் டெல்லி ராஜபாதைக்கு வந்தனர். அவர்களை பிரதமர் நரேந்திர மோடி, முப்படைத் தளபதிகள் வரவேற்றனர். விழா மேடையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியேற்றினார்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் உயிரிழந்த அசாமை சேர்ந்த ராணுவ வீரர் ஹேங்பன் தாதாவுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. அவரது மனைவி சாசென் லோவாங், பிரணாப் முகர்ஜியிடம் இருந்து விருதைப் பெற்றுக் கொண்டார்.

விழாவில் முப்படைகளின் வலிமையை பறைசாற்றும் அணிவகுப்பு மற்றும் நாட்டின் பன்முக கலாச்சாரத்தை பிரதி பலிக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு இடம்பெற்றன.

விழாவில் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நயன் பங்கேற்றார். அவரை கவுரவிக்கும் வகையில் முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த முப்படை வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

இந்த ஆண்டு அணிவகுப்பில் முதல் முறையாக தேசிய பாதுகாப்புப் படையைச் (என்.எஸ்.ஜி) சேர்ந்த 140 கறுப்பு பூனை வீரர்கள், எம்.பி-5 ரக துப்பாக்கியுடன் மிடுக்காக ராஜபாதை யில் நடைபயின்றனர்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் இலகுரக போர் விமானங்கள் குடியரசு தின விழாவை முதல் முறையாக அலங்கரித்தன. விழா நடந்தபோது அவை வானில் சீறிப் பாய்ந்தன. நான்காம் தலைமுறையைச் சேர்ந்த தேஜாஸ் விமானங்கள் மணிக்கு 1,350 கி.மீ. வேகத்தில் பறக்கக் கூடியவை.

ருத்ரா, துரூப் இலகு ரக ஹெலி காப்டர்கள், எம்.ஐ-35 ஹெலிகாப்டர்கள், சி-130ஜே, சி-17 விமானங்கள், சுகோய், ஜாகுவார், மிக் 29 ரக போர் விமானங்கள் வானில் சீறிப் பாய்ந்தன.தரையில் இருந்து 300 மீட்டர் உயரத்தில் மூன்று போர் விமானங்கள் மணிக்கு 780 கி.மீ. வேகத்தில் மின்னலாகப் பாய்ந்தன.

அணிவகுப்பில் தனுஷ் ரக பீரங்கிகள் முதல் முறையாக பங்கேற்றன. இவை போபர்ஸ் பீரங்கிகளின் மேம் படுத்தப் பட்ட வடிவமைப்பு ஆகும். மேலும் பீஷ்மா ரக பீரங்கிகள், ஆகாஷ், பிரம்மோஸ் ஏவு கணைகள், சுவாதி ரேடார் 
உள்ளிட்டவை இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் ராஜ பாதையை கடந்து சென்றன. 
கடற்படை சார்பில் கொல்கத்தா, கல்வாரி நீர்மூழ்கி கப்பல் களின் மாதிரிகள், கடற்படை ரோந்து விமானத்தின் மாதிரிகள் அடங்கிய வாகனம் ராஜபாதையில் வலம் வந்தது.

ராணுவ போலீஸ் படை வீரர்கள் மோட்டார் சைக்கிளில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர். டெல்லி பள்ளிகளைச் சேர்ந்த 600 மாணவிகள் கண்கவர் கலைநிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் விதவிதமான அலங்கார ஊர்திகள் அணிவகுப்பை அலங்கரித்தன. தமிழகத்தின் சார்பில் மாநிலத்தின் கலாச்சார பெருமையை பறைசாற்றும் வகையில்கரகாட்டம், நாதஸ்வர கச்சேரியுடன் கூடிய அலங்கார ஊர்தி ராஜபாதையில் வலம் வந்தது. 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் பல்வேறு கட்சியின் மூத்த தலைவர்கள் விழாவில் பங்கேற்றனர்.

Trending News