99 சதவீதப் பொருட்கள் மீதான GST வரி 18 சதவீதத்திற்குள் கொண்டு வரப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில், இன்று GST குழுவின் கூட்டம் நடைபெறுகிறது!
சிமெண்ட், டயர்கள், ஏசி இயந்திரங்கள், கட்டுமானப் பொருட்கள் உள்பட 34 பொருட்கள் தற்போது 28 சதவீத வரியை கொண்டுள்ளன. அவற்றை 18 சதவீத வரம்புக்குள் கொண்டு வருமாறு தொழில் வர்த்தகத் துறையினர் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் பொருட்களின் மீதான GST வரம்பை மறு ஆய்வு செய்வதற்கான கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. மூன்று மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலில் GST காரணமாக BJP-க்கு பின்னடைவு ஏற்பட்டதாக கருதப்படும் நிலையில், பிரதமர் மோடி ஓரிரு ஆடம்பர பொருட்கள் தவிர அனைத்துப் பொருட்களையும் 18 சதவீத வரம்புக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
அவ்வப்போது மாநில அரசுகள் மற்றும் தொழில்துறையினரிடம் ஆலோசனைகள் நடத்தி GST வரியில் மாற்றம் கொண்டு வரப்படுவதாகவும் மோடி விளக்கம் அளித்தார். இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெறும் GST கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் மீதான 28 சதவீத GST வரி 18 சதவீதமாக குறைக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.
இந்த வரிக்குறைப்பு கட்டுமானத் தொழிலுக்கும் வீடு கட்டுவதற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாதந்தோறும் GST வரியின் இலக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்படி மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.