உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவமனையும் சேர்ந்து செயல்படுகிறது. இந்த மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் பிறந்த குழந்தைகள் உள்பட சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் 70 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தைகள் இறப்புக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததுதான் காரணம் என கூறப்படுகிறது. அரசு தரப்பில் மறுக்கப்பட்டு மூளை அழற்சி காரணம் என கூறுப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டவுடன் விசாரணை நடைபெற்றது. ஆகஸ்ட் 10-ம் மற்றும் 11-ம் தேதிகளில் பிறந்த குழந்தைகள் வார்டில் உயிரிழப்பு ஏற்பட்டது ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணத்தால்தான் என தகவல்கள் தெரிவித்து உள்ளன.
மேலும் கடந்த 12-ம் தேதி மாநில அரசு மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணை செய்து அறிக்கையை தலைமை செயலாளருக்கு அனுப்பி வைக்கும்படி கோரக்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் ராஜீவ் ரவ்தேலாவிற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. மருத்துவமனை உயிரிழப்பு தொடர்பாக ரவ்தேலா பி.ஆர்.டி. மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களிடம் விசாரணையை மேற்கொண்டார்.
தகவல்களின்படி மாஜிஸ்திரேட் அறிக்கையில் பிஆர்டி மருத்துவ கல்லூரியின் முதல்வருக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளது என்பது தெரியும், மருத்துவ கல்வியகம் மற்றும் சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகளை அவர் எச்சரிக்கை விடுக்க தவறிவிட்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகஸ்ட் 9-ம் தேதி அன்று மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்ட போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் ஆக்ஸிஜன் வாங்கியதற்கு பணம் கொடுக்க வேண்டிய விபரம் தொடர்பாக அவரிடம் எதையும் கல்லூரி முதல்வர் எடுத்துரைக்கவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மருத்துவமனை நிர்வாகம் சுமார் ரூ.69 லட்சம் வரை பாக்கி வைத்ததால் மருத்துவமனைக்கு திரவ ஆக்ஸிஜன் வினியோகிப்பதை நிறுத்திய தனியார் நிறுவனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்க மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கையில் பரிந்துரை செய்து உள்ளார்.
மேலும் என்சிபாலிட்டிஸ் வார்டில் ஏசி பொருத்தப்பட்டு உள்ளது, ஆனால் இயங்கவில்லை, அதனை சதிஷ்குமார் சரிசெய்யவில்லை என்றும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிறார்கள் உயிரிழப்பிற்கு டாக்டர் கபீல் கான் மீதும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது விசாரணை அறிக்கையில் என தகவல்கள் தெரிவித்து உள்ளன.